குழந்தை வளர்ப்பு - 15 : 'பிரிக்க முடியாத அறிவுசுடர்'
http://mazalaipiriyan.blogspot.com/2013/11/14.html
தற்போதைய உலகை
கண் திறந்து பார்த்தால்..
இறைமறுப்பு நாத்திக
வாதம், இணைவைப்புக் கொள்கைகள்; இவை எங்கெல்லாம் கோலோச்சிக் கொண்டிருக்கின்றனவோ, அங்கெல்லாம்…
உலகை மயானமாக்கும் முயற்சிகள் நடந்து வருகின்றன. ஒரே ஒரு பொத்தானை அழுத்தினால் போதும்,
அழிவுப் பிரளயம் ஆரம்பித்துவிடும் என்பதற்கு அடையாளமாய் மலை மலையாய் குவித்து வைத்திருக்கும்
அணு ஆயுதங்கள், தடி எடுத்தவன் தண்டல்காரன் என்பது போல, வலியவன், மெலியவனை அடக்கிவிடும்
ஆர்ப்பரிப்புகள்.
அக வாழ்வியலோ அத்தனை அசிங்கங்களையும் சுமந்து நிற்கும் சுமை தாங்கிக்
கற்களைப் போல மிகைத்துவரும் ஒழுக்கக்கேடுகள். பெண்ணை, பெண்ணும், ஆணை, ஆணும் மணம் புரிந்துகொள்ளத்
துடிக்கும் வெட்கமின்மைகள், தெருவில் சகஜமாக வந்துவிட்ட நிர்வாண கலாச்சாரம்.
வட்டிப்
பொருளியல் அமைப்பில் சுரண்டப்படும் வறிய நாடுகள். இப்படி தீயச் சொல்லில் அதாவது தீய
‘கலிமா’வில் அல்லல்பட்டுக் கொண்டிருக்கும் பூமிப்பந்து!
இன்று உலகளவில்,
முஸ்லிம்கள் மிகக் குறைந்தளவு கல்வி கற்றவர்களின் பட்டியலிலே இடம் பெற்றிருக்கிறார்கள்.
அதிலும் குறிப்பாக மாறிவரும் சூழலில் முஸ்லிம் குழந்தைகளின் கல்வி அமைப்பு பெற்றோர்களுக்குப்
பெரும் சவாலாகவே இருக்கிறது.
இன்றைய கல்வி அமைப்பு வெறும் பொருளியல் கண்ணோட்டமாகவே
உருவாக்கப்பட்டுள்ளது. நமது கல்விமுறை பேரும், புகழையும் தருகிறது. செல்வந்தர்களையும்,
லோகாயதவாதிகளையும் மட்டுமே உருவாக்குகிறது. ஆனால், ஒழுக்கவிழுமியங்களின் அடிப்படையில்
நல்ல மனிதர்களை உருவாக்கத் தவறிவிட்டது.
முஸ்லிம்கள் நாட்டின் மனித வளத்தோடு உயரிய
ஒழுக்கத் தேட்டங்களையும், வார்த்தெடுக்க வேண்டிய பொறுப்பு மிக்கவர்கள். இதற்கு இம்மை
– மறுமை வெற்றிசார்கல்வியை ஒருங்கே பெற வேண்டியது இன்றியமையாதது.
முஸ்லிம்களில்
கணிசமானோர் இஸ்லாமியக் கல்வி என்பது மார்க்கக் கல்வியைப் பெறுவது மட்டுமே என்று கருதுகிறார்கள்
அதாவது திருக்குர்ஆன், ஹதீதுகள் என்னும் நபிமொழிகள், பிக்ஹ் எனப்படும் சட்டவியல், சீரத்
எனப்படும் நபிகளாரின் வரலாறு மற்றும் இஸ்லாமிய வரலாறுகள் இதில் அடங்கும்.
உலகளவில் இரண்டுவிதமான
முஸ்லிம் குழுக்கள் இருப்பதைக் காணலாம். முதலாம் வகையினர், மேற்கத்திய கல்விமுறை அல்லது
மதசார்பற்ற கல்விமுறைக்கு உட்பட்டவர்கள். இரண்டாம் வகையினரோ வெறும் இஸ்லாம் மார்க்கம்
சார்ந்த கல்விமுறைக்கு உட்டபட்டவர்கள்.
20 ஆம், நூற்றாண்டில்
காலனி ஆதிக்கத்துக்கு உட்டபட்டிருந்த நாடுகளைச் சேர்ந்தவர்கள், மேற்கத்திய கல்வி அமைப்பே
சிறந்தது என்று மூளைச் சலவை செய்யப்பட்டார்கள். முஸ்லிம்களும் இந்தப் பாதிப்புக்குள்ளானார்கள்.
மதசார்பற்ற கல்வி என்னும் போர்வையில் உலோகாயதக் கல்வியைப் பெற்றார்கள்.
மற்றொரு சாரரோ
‘தீனியாத்’ எனப்படும் சமயக் கல்வியைக் கற்றார்கள்.
அதேபோல, மேற்கத்திய நாடுகளுக்கு
புலம் பெயர்ந்தவர்கள் தங்கள் அடையாளங்களை இழந்திடாமலிருக்க உலகக் கல்வியோடு மார்க்கக்
கல்வியையும் விடுமுறை நாட்களில் கற்க வேண்டிய கட்டாயம்.
கல்வியை 'உலகக்
கல்வி' என்றும், 'மார்க்கக் கல்வி' என்றும் முஸ்லிம்கள் கூறுபோட்டார்கள். இதன் விளைவாக
முஸ்லிம்களிலிருந்தே ஒருபுறம் இஸ்லாத்தின் கொடிய பகைவர்களும், இன்னொருபுறம் இஸ்லாத்தை
உயிர் கொடுத்து மேலோங்கச் செய்யும் தியாகச் சுடர்களும் தோன்றினார்கள். இந்தப் போராட்டம்
இன்றும் உலகளவில் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இம்மையும் – மறுமையும்
பிரிக்க முடியாதவை. இன்னும் சொல்லப் போனால்.. இம்மைதான் மறுமையின் விளைநிலம்!
அதனால், உலகக்
கல்வியும், மார்க்கக்கல்வியும் பிரிக்க முடியாத ஒன்றோடு ஒன்றிணைந்தவை. உலக மாறுதல்களோடு
நமது குழந்தைகளுக்கு கல்வி தர வேண்டியது பெற்றோர்களின் இன்றியமையாத கடமையாகும்.
- தொடரும்.