குழந்தை வளர்ப்பு -14 : 'பெரு விருட்சமாய் ஒரு சொல்!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/11/blog-post_8.html
மனிதன் இஸ்லாத்தின்படி
வாழ்வது அவனுக்கான நன்மையைத் தேடிக் கொள்ளும் செயல். அவன் வாழும் சமூகத்துக்கு, மனித
இனத்துக்கு, நன்மையை விளைவிக்கும் செயல்.
மனிதர்களுக்கு
அளித்துள்ள அடைக்கலப் பொருட்கள் அதாவது சக்தி, சாமார்த்தியங்கள், உயிர், உடல் வாழ்வின்
அனைத்து சாதனங்களான இவற்றின் மூலமாக இறைவன் சுவனத்தை அளிப்பதாக வாக்களிக்கின்றான்.
இது ஒரு
விந்தையான விஷயம் எனலாம். ஏனென்றால் எல்லாவற்றையும் அளித்துவிட்டு அவற்றை அளித்தவனே
மீண்டும் சுவனத்தை அளிக்கும் விந்தை இது. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை இந்த அடைக்கலப்
பொருட்களை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை பொறுத்தே அந்த சுவனம் கிடைப்பதில் உறுதியாகிறது
அதாவது அமானிதப் பொருட்களை நல்வழியில் பயன்படுத்தினால் சுவனம் தருவதாக இறைவன் அளித்துள்ள
வாக்குறுதி இது. முதலீடு இல்லாத கொள்ளை இலாபம் எனப்படும் விந்தையிது!
“உண்மையில், இறைவன்
இறைநம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களின் உயிர்களையும், உடைமைகளையும் சுவர்க்கதிற்குப்
பகரமாய் விலைக்கு வாங்கிக் கொண்டான்!” – (திருக்குர்ஆன்: 9:11) என்கிறான் இறைவன்.
ஒரு மனிதன் எந்தக்
கலிமாவை, நாவாலும், மனதாலும் மொழிகிறானோ அந்த கலிமாவின் உட்பொருளை குழந்தைகளுக்குப்
புரிய வைப்பது மிக முக்கியம். அந்தப் புரிதலின்தான் குழந்தைகள் இஸ்லாமிய வாழ்க்கை நெறியை
தங்களின் வாழ்வியல் கொள்கையாக.. வழிமுறையாக.. ஏற்றுக் கொள்ள முடியும். இல்லையென்றால்,
அவர்கள் நமக்கு நேர் எதிர்க்குழுக்களில் நமக்கு எதிராகவே அணிவகுத்து நிற்பார்கள். அறியாமையின்
காரணமாகப் படைத்தவன் மீதே யுத்தம் தொடுப்பார்கள். அவர்கள் தங்கள் வாழ்க்கையைப் பாழ்படுத்திக்
கொள்வதோடு சமூகம் சார்ந்த வாழ்க்கையையும் வீணாக்கிவிடுவார்கள்.
கலிமா தய்யிபாவை
இறைவன் திருக்குர்ஆனில் இப்படி உவமையோடு விளக்குகின்றான்:
“நல்ல வார்த்தைக்கு
– கலிமா தய்யிபாவுக்கு – இறைவன் இவ்வாறு உவமை கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா?
அது ஒரு நல்ல மரத்தைப் போன்றதாகும்! அதன் வேர் பூமியில்
ஆழப் பதிந்திருக்கின்றது. அதன் கிளைகள் வானளாவ
உயர்ந்து நிற்கின்றன. எந்நேரமும் அம்மரம்
தன் இறைவனின் ஆணைக்கேற்ப கனிகளை வழங்கிக் கொண்டிருக்கின்றது, மக்கள் படிப்பினை பெற வேண்டும்
என்பதற்காக இறைவன் அவர்களுக்கு இத்தகைய உவமைகளைக் கூறுகின்றான். மேலும், கெட்ட வார்த்தைக்கு
உவமை, ஒன்றுக்கும் உதவாத ஒரு மரத்துக்கு ஒப்பானதாகும். அந்த மரம் பூமியின் மேல்மட்டத்திலிருந்து
பிடுங்கி எறியப்படுகின்றது: அதற்கு எவ்வித நிலையான தன்மையும் கிடையாது!”
(14:24-26)
உங்கள் கணணெதிரே
வானளாவி விரிந்து படர்ந்திருக்கும் ஒரு விருட்சத்தைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.
பெருத்த தண்டு,
கொப்பும், கிளையுமாய்ப் படர்ந்திருக்கும் விருட்சம், பூமியை மூடி மறைக்கத் துடிக்கும்
பிரயத்தனம், காய்த்துக் குலுங்கும் கனிகள், பறவைகளின் சரணாலயம். கால்நடைகள், மனிதர்களுக்கு
களைப்பாற நிழல் தரும் உறைவிடம், பூமியைத் துளைத்திடும் விதமாய் ஆழ.. ஆழ.. வேர் பரப்பி
விண்ணுயர ஓங்கி வளர்ந்திருக்கும் அசைக்க முடியாத பெரு விருட்சம், அதன் ஜனனமே எஃகு நிகர்
வித்து, நீர், நிலம், வெப்பம், காற்று, ஆகாயம் என்று சக படைப்புகளோடு உறவாடி தன் தகுதிகளை
நிரூபித்து வளர்ந்து நிற்கும் பலன் தரும் விருட்சம்.
அதோ சற்றுத் தொலைவில்
முளைத்திருக்கிறதே ஒரு சின்னஞ்சிறு முட் செடி! அதையும் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.
ஒரு சிறு குழந்தைகூட
அதை மிதித்து நசுக்கிட முடியும். ஆடு-மாடு போன்ற கால்நடைகள்கூட ஓர் இழு.. இழுத்து எறிந்திட
இயலும். மழை பொய்த்துப் போனால்.. கருகிவிடும் கருகி! தொட்டால் முள் குத்தும். எதற்கும்
பயன் தராத மேலோட்டமாய் பரப்பி நிற்கும் முட் செடி! பலவீனமான வித்திலிருந்து முளைத்திருக்கும்
முட் செடி!
இவற்றைத்தான் நல்ல
கலிமா அதாவது நல்ல சொல், தீய கலிமா அதாவது தீய சொல் என்று இறைவன் உவமையோடு வேறுபடுத்திக்
காட்டுகின்றான்.
நல்ல கலிமா சொல்லும்
செய்தி என்ன?
உலகைப் படைத்தவன்
இறைவன். படைப்பாளனான அந்த
இறைவன் ஒருவன். இதற்கு இந்த அண்டசாரத்தின்
ஒழுங்கமைப்பே சாட்சி! அணு முதல் அண்டம்வரை
படைத்தவனின் கட்டளைகளுக்கு அடிபணிகின்றன.
கலிமா தய்யிபா
எனப்படும் சொல்லை ஒப்புக் கொண்டு செயல்படுத்தினால்.. வானம், பூமி உங்கள் வசப்படும். உங்கள் வாழ்வியல்
அமைப்பு பிரபஞ்ச அமைப்போடு ஒன்றிவிடும். ஒரு பெரு விருட்சமாய்..
ஆகாயம் தொடும் பெரு விருட்சமாய் வாழ்க்கையும், வளர்ந்து நிற்கும்.
தீய கலிமா சொல்வதென்ன?
‘படைத்தவன் இல்லை!’
– என்ற பொய்மை வீழ்ச்சியோடு இது ஆரம்பிக்கிறது. கண்டதெற்கெல்லாம்
அச்சம் பிறக்கிறது. இணை வைப்பு கற்பனைகள்
முட்செடிகளாய் முளைக்கின்றன. மனிதனின் வாழ்க்கை
முட்செடி போல விரைவில் தீய்ந்தும் போகிறது. இந்த இரண்டு கலிமாக்களின்
அதாவது சொற்களின் விளைவுகளையும் குழந்தை மொழியில் விளக்குவது பெற்றோரின் கடமையாகும்.
- தொடரும்.