குழந்தை வளர்ப்பு - 18, 'இளைஞர்களின் முன் உள்ள அறைகூவல்!
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/17.html
"மறுமை நாளில் அந்த ஐந்து கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் யாரும் அவ்விடத்தை விட்டு நகர முடியாது!" - என்கிறார்கள் நபிகளார். அவை என்ன கேள்விகள் தெரியுமா?
- வாழ்நாளை எப்படி கழித்தாய்?
- இளமையை எதற்காகப் பயன்படுத்தினாய்?
- எந்த வழிகளில் பொருளை ஈட்டினாய்?
- எந்தெந்த செயல்களுக்காக அந்தப் பொருளைச் செலவழித்தாய்?
- கற்ற கல்வியை எப்படி பயன்படுத்தினாய்? (திர்மிதி)
முதல் கேள்வி பொதுவில் எல்லா மனிதருக்கும் வாழ்க்கைக்கான அடித்தளம்.
இரண்டாவது கேள்வி இளைஞர்களுக்கானது. தன் இளமையை சீரியப் பணிகளுக்காகப் பயன்படுத்திய இளைஞன் அதிஷ்டசாலிகளான அந்த ஏழு பேரின் பட்டியலில் அடங்கிவிடுவான்.
அது என்ன பட்டியல்?
ஒதுங்குவதற்கு இடம் கிடைக்காத வெட்ட வெளியும், கொளுத்தும் வெயிலுமாய் காட்சி தரும் மறுமை நாளில் இறைவன் தன் பேரருள் பெருமழையை அந்த ஏழு பேர் மீது சொரிவான். தன் சிம்மாசனத்தின் கீழாக அவர்கள் நிழல் பெறும் பாக்கியம் அது. அந்த எழுவர் இவர்கள்தாம்:
- நீதிமிக்க ஆட்சியாளன்.
- இறைநினைவுகளில் இளமையைக் கழிக்கும் இளைஞன்.
- இறைவழிபாட்டுணர்வோடு இறைவழிப்பாட்டுத்தலத்தால் ஈர்க்கப்படும் மனிதன்.
- இறைவனுக்காக நட்பும், இறைவனுக்காக பிரிவையும் மேற்கொள்ளும் தோழர்.
- இறைவனின் அச்சத்தில் விபச்சாரத்திலிருந்து தன்னைத் தடுத்துக் கொள்ளும் மனிதன்.
- வலது கரம் கொடுப்பதை இடது கரம் அறியாமல் தருமம் செய்யும் கொடையாளி.
- தனிமையில் தன் தவறுகளை இறைவன் திருமுன் சமர்ப்பித்து கரைந்துருகி கண்ணீர் சொரியும் நல்லிதயம் கொண்டவன். (புகாரி, முஸ்லிம்)
ஐந்து விஷயங்களை ஐந்து விஷயங்களுக்கு முன்பாக பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிகளார் அறிவுறுத்துகிறார்கள்:
- முதுமை வரும்முன், இளமையை..!
- நோய் வரும்முன், உடல் நலத்தை..!
- ஏழ்மை வரும்முன் செல்வநிலையை!
- வேலைச்சுமை வரும்முன், ஓய்வை!
- மரணம் வரும்முன் ஆயுளை!
அதிவேகமாக கார் ஓட்ட, சீரான கட்டுப்பாடுகளும் வேண்டும். இளமையும் அப்படிதான்! எதையும் சாதிக்கத் துடிக்கும் மனநிலை கொண்டது அது. கட்டுப்பாடு இழப்பதற்கு அனைத்து சூழ்ச்சிகளையும், 'சாத்தான்' தூண்டிவிடுவான். அதற்காக, உலகாசைகள் அனைத்தையும் கண் முன் இலவசமாகக் கொண்டு வந்து நிறுத்துவான். 'ஒரு தீமைக்கு மற்றொரு தீமை இலவசம்!- என்னும் வித்தில் அள்ளி அள்ளி தருவான். ஆடல், பாடல்கள், களி நடனங்கள், மது வகையறாக்கள், அழகிய பெண்கள் என அவனுடைய இலவசப் பட்டியல் விரியும். இவற்றை அடையாளம் காண பிள்ளைகளைப் பழக்கப்படுத்த வேண்டும். தீமைகளிலிருந்து விலகியிருப்பது உடலியல் ரீதியாக, ஆன்மிக ரீதியாக ஒரு சேர நன்மை பயக்கும் செயல் என்பதை உணர்த்த வேண்டும்.
அன்பு நபிகளார் அவர்களின் அருமைத் தோழர், தோழியர் மற்றும் அவர்களைப் பின்பற்றி வாழ்ந்த இறையடியார்கள் இவர்கள் எல்லாம் நம் முன்னோர்கள். இவர்களுக்கும், நாம் வாழும் இன்றைய காலத்துக்கும் இடைவெளி பல நூற்றாண்டு! இந்த தலைமுறை இடைவெளி பல சிக்கல்களை இளை சமுதாயத்தில் உருவாக்கியதால்.. ஏற்படும் தள்ளாட்டங்கள்; மேற்கத்திய கலாச்சாரம் உருவாக்கும் தாக்கங்கள், உலகளவில் இஸ்லாத்துக்கு ஏற்பட்டு வரும் சேதாரங்கள், சமுதாயத்துக்கு உள்ளேயே நடந்துவரும் குழப்பங்கள்!' - என ஏகத்துக்கும் பிரச்னைகளைச் சந்திகக வேண்டிய சூழல். இதில் பிள்ளைகள் சிக்கி விரக்தியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய மிக முக்கியப் பொறுப்பும் உண்டு.
வாழும் சூழல், கலாச்சாரம் இவற்றை எல்லாம் உள்வாங்கி, அதில் கரைந்து விடாமல், எவ்விதச் சிதைவுக்கும் ஆளாகாமல் தனித்து விளங்குவது சாமான்யப் பணியல்ல. நம் இளைஞர்களின் முன் உள்ள பெரும் அறைகூவல் இது.
- தொடரும்.