குழந்தை இலக்கியம்: 'வாழ்க்கை வாழ்வதற்கே!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/04/blog-post_2491.html
அந்த இளைஞன் மிகவும் சோர்ந்து காணப்பட்டான். துயரம் வாய்ந்த முகம். கவலைப்படர்ந்த கண்கள். தள்ளாடும் நடை.
ஏதோ துக்கத்தை சுமந்தவாறு அவன் நடந்தான். மலை உச்சியை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தான்.
உயரமான மலை அது. நிறைய மரங்கள் செழித்து வளர்ந்திருந்தன. பச்சைப் போர்வையை மலை போர்த்திக் கொண்டிருந்தது. கண்ணைக் கவரும் பூக்கள் பூத்திருந்தன. உச்சியிலிருந்து நீலக் கடல் தென்பட்டது. ஆனால், அவற்றை ரசிக்கும் நிலையில் அவன் இல்லை.
ஒரு பாறையின் மீது அமர்ந்தவன் புலம்ப ஆரம்பித்தான்:
“என்ன படித்து என்ன பயன்? வேலை கிடைக்கவில்லை. பிழைக்க வேறு வழியும் தெரியவில்லை. இன்னும் எத்தனை நாள் அனாதையாய், பொருளில்லாமல் தவிப்பது? இது ஒன்றுதான் வழி. உயிரைப் போக்கிக் கொள்வதைத் தவிர இனி வேறு வழியே இல்லை. ஆஹ்..! ஹா.. ஹா..!! பிரச்னைகள் ஒழிந்தன!”
துக்கத்தையும் மீறி சிரிப்பு வெளிப்பட்டது.
தற்கொலைக்கு அவன் துணிந்துவிட்டான்.
இளைஞன் சுற்று முற்றும் தேடினான்.
யாரையும் காணவில்லை.
ஆனால், சிரிப்போ நின்றபாடில்லை.
கடைசியில், சிரித்தது அவன் மனசாட்சிதான் என்று தெரிந்ததும் அவன் கோபமாகக் கேட்டான்”
“ஏய்! ஏன் சிரிக்கிறாய்?”
குத்துக்காலிட்டு அமர்ந்திருந்தவனிடம் மனச்சாட்சி, “சிரிக்காமல் என்ன செய்வது? இளைஞனே! சிரிக்காமல் வேறு என்ன செய்வது? உன்னைப் பார்க்கும் போது, சிரிப்புதான் வருகிறது” – என்று சொல்லிவிட்டு மேலும் சிரித்தது.
“சிரித்தது போதும். காரணத்தைச் சொல் முதலில்!” – இளைஞனிடமிருந்து வார்த்தைகள் கோபமாக வெளிப்பட்டன.
சிரிப்பை நிறுத்திக் கொண்ட மனச்சாட்சி,
“இளைஞனே! எவ்வளவு அற்புதமான படைப்பு நீ! அதோ பார்! தூண்களில்லாமல் கூரையாய் வானம்; உனக்காக! உன்னைத் தடவிச் செல்லும் காற்று; நீ சுவாசிக்க! குடை குடையாய் நகரும் மேகங்கள்; மழையைப் பொழிவிக்க.. நீ நீர் குடிக்க! நீரைக் கொண்டு செழித்து வளர்ந்திருக்கும் தாவரங்கள்.. பயிர் பச்சைகள்; உன் பசியாற்ற. உஷ்ணத்தைத் தர சூரியன். ஓடியாடி உழைக்க பகல். ஓய்வெடுக்க இரவு. எவ்வளவு அதிஷ்டம் பார் உனக்கு!”
மனச்சாட்சியின் குரலை இளைஞன் உற்றுக் கவனிக்க ஆரம்பித்தான்.
“… உன் அனைத்துத் தேவைகளுடன் … வசதிகளுடன் நீ படைக்கப்பட்டிருக்கின்றாய்!
உன்னையே எடுத்துக் கொள்ளேன்! நீண்ட உரம் வாய்ந்த கைகள்; உழைக்க. திடம் வாய்ந்த கால்கள்; நடக்க.. வழி நடத்த. முகத்தில் பார்க்கக் கூடிய கண்கள். கேட்கக் கூடிய காதுகள். சுவாசிக்க
மூக்கு. சுவைக்க நாக்கு.
மூக்கு. சுவைக்க நாக்கு.
எவ்வளவு அதிஷ்டசாலி நீ..!
சரி பத்தாயிரம் ரூபாய் தருகின்றேன். உன் ஒரு கண்ணைத் தருவாயா எனக்கு?”
பேசிக் கொணடே வந்த மனச்சாட்சி திடீரென்று கேள்வி கேட்டது.
“முடியாது…!” – என்றான் இளைஞன் வேகமாக.
“இருபதாயிரம்!”
“ஊஹீம்..”
“ஒரு லட்சம்!”
“முடியவே.. முடியாது.. கண்ணைத் தர முடியாது!” – கண்களை இறுக மூடிக் கொண்டான் அவன்.
“சரி! உன் ஒரு காதையாவது தாயேன்!”
“ஊஹீம்..!”
“… ஒரு கையையாவது.. வேண்டாம்… வேண்டாம்.. ஒரு காலையாவது..?”
“அய்யய்யோ.. முடியாது என்றால் என்னை விட்டுவிடேன்!”
“ஆங்.. இப்போது தெரிகிறதா இளைஞனே! எவ்வளவு பெரிய செல்வங்கள், விலை மதிப்பற்ற உடல் உறுப்புகளை நீ பெற்றிருக்கிறாய் என்று!
“அதோ..! கடலைப் பார்!”
கடலில் ஒரு கப்பல் மிதப்பது தெரிந்தது.
“வானத்தைப் பார்!”
வானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தது.
“.. இதையெல்லாம் கண்டுபிடித்தது யார் தெரியுமா? உன் அறிவுதான் இளைஞனே! உன் அறிவேதான்!
இவ்வளவு பெரிய மனிதன் நீ! இவ்வளவு செல்வங்கள்; வளங்கள்; அருட்கொடைகள் வைத்துக் கொண்டு என்ன முடிவிற்று வந்திருக்கிறாய் நீ? பைத்தியக்காரா!
எழுந்திரு! வாழ்க்கையுடன் போராடு! துணிச்சலுடன் முன்னேறு! பொறுமையுடன்… பொறுப்புடன் தாக்குதல் தொடு! முனைப்புடன் முன்னே செல்! இலக்கை அடையும்வரை ஓயாதே! எழுந்திரு…! எழுந்திரு! வாழ்க்கை வாழ்வதற்கே!”
மனச்சாட்சியின் கூப்பாடு அவனை உசுப்பிவிட்டது.
சஞ்சலமடைந்த மனது தெளிவடைந்தது. புது வெள்ளமாய் அவனுள் உற்சாகம் கொப்பளித்தது. வாழ்க்கையின் எதார்த்தம் அவனுக்குப் புரிந்தது.
எழுந்து நின்றான்.
மலையைச் சுற்றிப் படர்ந்திருந்த இயற்கைக் காட்சிகளை ரசித்தான். நீல நிற வானத்தைக் கண் சிமிட்டாமல் பார்த்தான். உடலைத் தழுவிச் சென்ற காற்றைக் கட்டியணைக்க முயன்றான். கை – கால்களை, உடல் உறுப்புகளை மென்மையாக தடவி விட்டுக் கொண்டான்.
பாதையில் தடையாய் இருந்த கற்களை எட்டி உதைத்தான்.
சீராக திரும்பி நடந்தான். அவனது ஒவ்வொரு அடியிலும் அழுத்தம் தெரிந்தது.