குழந்தை இலக்கியம்: ‘பிறர் பொருளை விரும்பாதே!’
http://mazalaipiriyan.blogspot.com/2013/04/blog-post_28.html
ரயில் வண்டி ஓடிக் கொண்டிருந்தது. ஜன்னலரோம் அமர்ந்திருந்த ராக்கேஷீக்கு ஒரே குழி. ஜன்னல் இருக்கையை வாங்குவதற்கு அவன் பட்ட கஷ்டம் அவனுக்குத்தான் தெரியும்.
வயதான் ஒருவர் பெரிய மனது பண்ணி அந்த இருக்கையை விட்டுக் கொடுத்திருந்தார்.
காற்றில் பறந்த முடிக் கற்றையைப் பின்னுக்குத் தள்ளிவிட்ட ராக்கேஷ் வெளியே பார்வையை ஓட விட்டான். ரயிலுக்குப் பயந்ததைப் போல மரங்கள் ஓடிக்கொண்டிருந்தன. அதைக் குறித்து அவனுடைய அறிவியல் ஆசிரியர் கூறியது நினைவிற்கு வந்தது.
பக்கத்தில் நீண்ட இருக்கையில் அமர்ந்திருந்த பெரியவர் - ராக்கேஷிற்கு இருக்கையைத் தந்த பெரியவர் – எழுந்து கழிப்பறைக்குச் செல்வதை அவன் பார்த்தான். சற்று நேரத்தில் அவர் திரும்பியும்விட்டார். பழையப்படி புத்தகம் படிக்க ஆரம்பித்தார். இந்த நேரத்தில் எதிர் அமர்ந்திருந்தவர் கழிப்பறைக்குச் சென்றார்.
கால்களை வசதியாக நீட்டிக் கொண்ட ராக்கேஷ் ஜன்னலுக்கு வெளியே பார்வையை ஓடவிட்டான். இந்த வேடிக்கையில் எதிரில் வந்தமர்ந்தவரையும் அவன் கவனிக்கவில்லை.
ரயில் ‘கட கட’ வென்று இரும்புப் பாலத்தின் மீது ஓடிக் கொண்டிருந்தது.
படித்துக் கொண்டிருந்த பெரியவர் ஏதோ நினைவு வந்தவராய் பரபரப்புடன் கழிப்பறைப் பக்கம் சென்றார். சென்ற வேத்தில் திரும்பிவிட்டார்.
“காணோமே?” – என்று முணுமுணுத்தவாறு கைகளைப் பிசைந்து கொண்டார்.
விஷயம் இதுதான்:
கழிப்பறைக்குச் சென்ற பெரியவர் நினைவு மறதியாகக் கைக் கடிகாரத்தை விட்டு வந்துவிட்டார். சற்று நேரம் கழித்துச் சென்று பார்க்கும்போது அது வைத்த இடத்தில் இல்லை.
சக பயணிகள் ஆளாளுக்கு ஒரு யோசனையைத் தெரிவித்தார்கள்.
கடைசியில் ஒருவர், “வண்டி இடையில் எங்கும் நிற்கவில்லை. அதனால், கடிகாரத்தை எடுத்தவர் தப்பிக்க வழியில்லை. பெட்டியின் அனைத்துக் கதவுகளையும் மூடிவிட்டுச் சோதனை போட வேண்டியதுதான்!”-என்றார்.
அதற்கு எல்லோரும் உடன்பட்டார்கள்.
ராகேஷ் யோசனையில் மூழ்கினான்.
முதலில் பெரியவர் கழிவறைக்குப் போனார்.
அடுத்தது… “ம்..;.” நெற்றியைச் சுருக்கிவிட்டுக் கொண்டான்.
“…. ஆங்..இதோ எதிரில் இருப்பவர் அல்லவா பெரியவருக்கு அடுத்ததாகப் போனார்!” – நினைவுப் படுத்திக் கொண்டான்.
“அப்படியானால்.. வாட்ச் காணாமல் போனது உண்மையானால்.. இதை இவர்தான் எடுத்திருக்க வேண்டும்!” மெல்ல முணுமுணுத்துக் கொண்டான். எதிரில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான்.
அவருக்கு நெற்றியெல்லாம் வியர்த்திருந்தது. சற்றுப் பதற்றத்துடன் காணப்பட்டார். அவசரம்.. அவசரமாக பேப்பரை எடுத்துப் படிப்பதைப் போல பாவனை செய்ய ஆரம்பித்தார்.
அதற்குள் சிலர் மும்முரமாக ஒவ்வொரு பயணியின் உடமைகளையும் சோதனையிட ஆரம்பித்திருந்தனர்.
பயணிகளும் அதற்கு புன்னகையுடன் ஒத்துழைத்துக் கொண்டிருந்தனர்.
எதிரில் அமர்ந்திருந்த ஆசாமி இருப்புக் கொள்ளாமல் தவிப்பதை ராக்கேஷ் நன்றாகக் கவனித்தான். நிலைமையை ஒருவாறு ஊகித்துக் கொண்டான். யாரும் சந்தேகப்படாதவாறு ஜன்னலோரம் கையை நீட்டினான். “கொடுங்க சார்!” – என்று அவருக்கு மட்டும் கேட்கும்விதமாகச் சொன்னான்.
பேப்பர் மறைவாக அமைய, மேல்பாக்கெட்டிலிருந்து கைக்கடிகாரம் ராக்கேஷின் கையில் வந்தது.
அதைப் பெற்றுக் கொண்ட அவன் கையை இறுக மூடிக் கொண்டான்.
“அம்மா! பாத்மூம் போகணும்!” – என்றான்.
அவனை யாரும் சந்தேகிக்கவில்லை.
சற்று நேரத்தில் பதற்றத்துடன் வந்தவன், “பெயரிவரே! இதுவா உங்க வாட்ச் பாருங்க!” – என்றான்.
கைக்கடிகாரம் மின்னிக் கொண்டிருந்தது.
“ஆமாம். இது என்னுடையதுதான்! எங்கிருந்தது தம்பி?”-பெயரியவர் சந்தோஷத்துடன் கேட்டார்.
தேடிக் கொண்டிருந்த அனைவரும் அங்கு வந்துவிட்டார்கள்.
ராக்கேஷ் தன் எதிர் இருக்கையில் அமர்ந்திருந்தவரைப் பார்த்தான். அவர் பரிதாபமாக விழிப்பதைக் கண்டான்.
“டாய்லெட்டின் வாஷ்பேஷினின் பக்கமாக ஓர் இரும்பு தட்டில் மாட்டிக் கொண்டிருந்தது!”-என்றான்.
பெரியவரை அனைவரும் கோபமாகப் பார்த்தார்கள்.
“சரியாகத் தேடியிருக்கக் கூடாதா?” எவ்வளவு சிரமம் கொடுத்துட்டீங்க நீங்க!” – சிலர் வாய்விட்டே கடிந்து கொண்டனர்.
ராக்கேஷ் பழையபடி ஜன்னலோரம் வந்து அமர்ந்தான். எதிரிலிருந்தவர் யாருக்கும் தெரியாமல் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
“நன்றி தம்பி! என் வாழ்நாள் முழுக்க மறக்க முடியாத சம்பவம் இது!”- அவரது கண்கள் லேசாகக் கலங்கின. அவர் திருட்டுக் குணம் கொண்டவர் அல்ல. கண நேரத்தில் அடுத்தவர் பொருளைச் சொந்தம் கொண்டாட நினைத்தவருக்கு அந்தச் சில நிமிடங்கள் மறக்க முடியாதவையாகும்.
தான் சொன்னது பொய் என்றாலும், ஒரு கண்ணியமான மனிதரின் கௌரவத்தைக் காப்பாற்றியது ராக்கேஷீக்கு முக்கியமாகப் பட்டது.
அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவது எவ்வளவு மோசமானது என்பது அவனுக்குப் புரிந்தது. அதில் அவனுக்குப் படிப்பினையும் இருந்தது.
ராக்கேஷ் மீண்டும் வெளியே நோட்டமிட்டான்.
மரங்கள் வேக வேகமாகப் பின்னுக்கு ஓடிக் கொண்டிருந்தன.