குழந்தை வளர்ப்பு - 19: 'முகங்களைக் காட்டுங்கள்'


இஸ்ரேலிய பயங்கரவாத ராணுத்தின் அறிக்கையின்படி, 'அஸ்மா முகைய்யரா'வின் கரு முடியைத் தாண்டி வலது காதுக்குச் சற்று மேலாக இருப்பது சிறு துளை மட்டுமே!'

அஸ்மா (16) மற்றும் அவளுடைய இளைய சகோதரன் அஹ்மது இருவரும் 'ரபாஹ்' அகதிகள் முகாமிலிருந்தவர்கள். தங்கள் வீட்டின் மேல் தளத்தில் புறாக்களுக்கு தீவனம் போட்டுவிட்டு, காய வைத்த துணிகளைச் சேகரித்துக் கொண்டிருந்தார்கள். அப்போதுதான் இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவம் அவர்களைச் சுட்டுக் கொன்றது.

பலஸ்தீனத்தில் அப்பாவி மக்களின் மீதான இஸ்ரேல் பயங்கரவாத ராணுவத்தின் அடக்குமுறை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் காக்கை, குருவிகளைப் போலச் சுட்டுத் தள்ளப்படுகின்றனர். இவர்கள் சின்னஞ்சிறுவர்களைச் சுட்டுத் தள்ளுவதுடன் பொய்க் காரணங்களையும் சொல்லிவிடுகின்றனர். இப்படிதான் 'அஸ்மா, அஹ்மது விஷயத்திலும் நடந்தது.
இவர்களின் கொலையை இஸ்ரேலிய ராணுவ அதிகாரிகள் 'வொர்க் ஆக்ஸிடென்ட்' என்று வெகு எளிதாக சொல்லிவிட்டார்கள். அதாவது, 'கொல்லப்பட்ட சிறுவர்கள் பாலஸ்தீனப் போராளிகளோடு குண்டு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததாகவும், அப்போது நடந்த விபத்தில் குண்டு வெடிப்பு சிதறல் பட்டு இறந்து போனதாகவும்' சொன்னார்கள்.

டாக்டர் அலி மூஸா, 'ரபாஹ்' மருத்துவமனையின் தலைமை மருத்துவர். இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளான 20க்கும் மேற்பட்ட பலஸ்தீனியர்களுக்கு அவசர சிகிச்சை அளித்தும் முடியாமல் தோற்றவர். அவர் ஆவேசத்துடன் சொல்கிறார்: "பொய்..! பொய்..! சுத்தப் பொய்! ஏனெனில் கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவரும் துப்பாக்கித் தோட்டாக்களால் துளைக்கப்பட்டவர்கள். வெடிகுண்டு சிதறல்களால் இறந்து போனவர்கள் அல்ல. இதில் எந்தச் சந்தேகமும் இல்லை!"
அஸ்மாவின் உடல் பல மணி நேரம் மருத்துவமனையின் பிணவறையிலும், 13 வயதான அஹ்மதின் உடல் மருத்துவமனைக்கு வரும் வழியிலிருக்கும் இஸ்ரேலியர்களுக்குச் சொந்தமான மலர் உற்பத்திக்குப் பயன்படுத்தும் குளிர்சாதனப் பெட்டகத்திலும் வைக்கப்பட்டது. ஏனென்றால் அப்போது அங்கு கடும் ஊரடங்கு உத்திரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. வெளியே தலையைக் காட்டினால்.. பிணமாக சரிய வேண்டியதுதான்.

அடுத்த நாள். இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவத்தால் கொல்லப்பட்ட 14 பேரின் உடல்களோடு சிறு மொட்டாய் அஹ்மதின் உடலும் கிடத்தப்பட்டிருந்தது. நெற்றியில் 'அமரத்துவத்துக்கு' அடையாளமாக இஸ்ரேலிய பயங்கரவாதிகள் தந்த துப்பாக்கிக் குண்டின் சின்னம் ... உறைந்து போன ரத்தக் கசிவோடு!

அந்த அப்பாவிகளின் உடல்கள் மீது ஹமாஸ் மற்றும் பல்வேறு பலஸ்தீன விடுதலைப் போராளி அமைப்புகளின் கொடிகளும் போர்த்தப்பட்டிருந்தன. அதில் 14 வயதான இப்ராஹீம் அல்குன் உடலும் ஒன்று. இஸ்ரேலிய கொடும் ராணுவத்தினரின் துப்பாக்கிக் குண்டு  பின் மண்டையைத் துளைத்து வலது கண் வழியே வெளியேறி இருந்தது. அந்தப் பச்சிளம் பாலகனின் முகம் குண்டு காயத்தால் கோரமாக இருந்தது.
சபர் அபு லிப்தா வயது 13, வீட்டுக்காக தண்ணீர் கொண்டு வரச் சென்றபோது, இஸ்ரேல் ராணுவத்தால் படுகொலை செய்யப்பட்டவன். இதயமில்லாதவர்கள் சுட்ட குண்டு சிறுவனின் முதுகு வழியே இதயத்தை துளைத்துச் சென்றிருந்தது.

ஷப்பீரின் கதை சோகமானது. தன் 16 வயது அண்ணன் யூசுப்புடன் வீட்டை விட்டு வெளியே வந்தபோது, இஸ்ரேலிய பயங்கரவாத ராணுவத்தால் சுடப்பட்டான். மூன்றாவது சகோதரன் அய்யூப் குண்டடிப்பட்டவர்களைக் காப்பாற்ற முயலும் நேரத்தில் அவனும் சுடப்பட்டான்.

"என் சகோதரர்கள் தண்ணீரை எடுத்துவரச் சென்றார்கள். துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே பார்த்தால், குண்டடிப்பட்டு கிடக்கிறார்கள். இருவருமே ரத்த வெள்ளத்தில் கிடக்க பதறிபோனேன் நான். காப்பாற்றப் போன எனக்கும் தோளில் குண்டு பாய்ந்தது. யூசுஃபை வீட்டுக்குள் தூக்கிவர எவ்வளவோ முயன்றும் அந்தத் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் எங்கள் முயற்சி வீணானது. ஆம்புலன்ஸ் வரும்வரை கிட்டதட்ட அரைமணி நேரம் ரத்த வெள்ளத்திலேயே அவன் கிடந்தான்!" - என்கிறான் அய்யூப்.
"... இஸ்ரேலிய ராணுவத்தினர் தெருவிலிருந்து சென்று விட்டார்கள் என்று நினைத்து ஜன்னலைத் திறந்தேன். அவர்கள் என்னை நோக்கிச் சுட்டார்கள்!" - என்கிறான் அஹ்மது ஹீசைன் (ஆதாரம்: மே 20, 2004 - தி கார்டியன்).

இஸ்ரேலிய பயங்கரவாதிகள் ராணுவ நடவடிக்கை என்னும் பெயரில் நாள்தோறும் தீவிரவாதத்தைக் கட்டவிழ்த்துவிடுகின்றனர். குழந்தைகளைக் கொலை செய்கின்றனர். இந்நிலையில் நம் உள்ளூர் 'சன் தொலைக்காட்சி' பலஸ்தீனத்தில் தீவிரவாதிகள் சிறுவர்களுக்குப் பயிற்சி அளிப்பதாக செய்தி வெளியிடுகிறது.

'வழிப்பறிக் கொள்ளையர்களிடமிருந்து தங்களுடைய உயிர், உடமைகளைக் காத்துக் கொள்ள ஆயுதம் ஏந்தலாம்!' -  என காவல்துறையே பொதுமக்களுக்கு அனுமதியளிக்கும்போது, ஐம்பது ஆண்டுகளாக சொந்தத் தாய்நாட்டை இழந்து தவிக்கும் மண்ணின் மைந்தர்கள் தங்களைக் காத்துக்கொள்ள எதிர்த் தாக்குதல் கொடுக்காமல் என்ன செய்வது? கல்லையும், மண்ணையும், மனித உடல்களையுமே தங்களின் ஆயுதங்களாக்கிப் போராடும் விடுதலைப் போராளிகளைக் கொச்சைப்படுத்துவதாகாதா இது?'
நம் நாட்டில் முஸ்லிம்களைக் கொன்றொழிக்கும் ஒரே நோக்கத்தில் துப்பாக்கிப் பயிற்சிகள் மற்றும் ஆயுதப் பயிற்சிகளை வெளிப்படையாகவே செய்துவரும் 'மேல்சாதி ஆர்.எஸ்.எஸ் - சங்பரிவார்' போன்ற பயங்கரவாதிகளை இதே தொலைக்காடசியில் விலாவாரியாகக் காட்டிவிமர்சித்திருந்தால் அது நாட்டின் ஒருமைப்பாட்டைக் காக்கும் செயலாகக் கருத இடமிருக்கும்.

பலஸ்தீனக் கைதிகள் நாளான ஏப்ரல் 20, 2003ல், பலஸ்தீன இணையமைச்சர் 'ராதி அல் ஜுரைய்யி' ஒரு தகவலை வெளியிட்டார்.

அன்றைய நிலவரப்படி 7254 பலஸ்தீனர்கள் கைதிகளாக இருந்தனர். இதில் 62 பேர் பெண்கள்.
இஸ்ரேல் சர்வதேச மனித உரிமைகளையும், சட்டங்களையும் என்றும் மதிப்பதேயில்லை. சிறார்கள் சம்பந்தமாக ஐ.நா மன்றத்தின் எந்தத் தீர்மானத்தையும் அது அங்கீகரிப்பதில்லை. இஸ்ரேலிய ராணுவச் சட்டம் பிரிவு 132 முழுவதும் மனித உரிமை மீறல்கள்தான். இஸ்ரேல் 'மேற்குக் கரையை' ஆக்கிரமித்தபின் இந்தச் சட்டப் பிரிவை பிரயோகித்தது.

பலஸ்தீனர்களுக்காகப் போராடும் மனித உரிமை அமைப்புகளின் கணக்கின்படி,

காஸா பகுதியிலிருந்த 47 பள்ளிக்கூடங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன.

4 பள்ளிகள் சித்திரவதைக் கூடங்களாயின.

இஸ்ரேல், பாலஸ்தீனத்தின் முக்கியமான ஐந்து நகரங்களைத் தன் கட்டுக்குள் வைத்திருக்க 2 ஆயிரம் ராணுவத்தினரை நிறுத்தியுள்ளது. இதுதான் 'உலக மகா அமைதிக் காவலன்' அமெரிக்காவின் செல்லப் பிள்ளை பயங்கரவாத இஸ்ரேலின் உண்மை முகம்.

தோட்டாக்களின் நிழலில்தான் பலஸ்தீனக் குழந்தைகளின் அன்றாட வாழ்க்கை கழிகிறது. சுடப்பட்ட தோட்டாக்களே இவர்களின் விளையாட்டுப் பொருட்கள். ஆனாலும், அச்சமில்லாமல் இவர்களின் வாழ்க்கைத் தொடர்கிறது. ஒரு விடுதலைக்கான விடியலைத் தேடும் முயற்சிக்கான அமைதி அது.

குழந்தை வளர்ப்பில் மிக முக்கியமானது, சமகாலத்து வரலாறுகளையம் பிள்ளைகளுக்குப் போதிப்பது. அதிலும் குறிப்பாக ஒடுக்கப்பட்டோரின் உயிர்த்துடிப்பூட்டும் வரலாறுகள் குழந்தைகளின் எதிர்காலத்துக்கு நம்பிக்கையூட்டும். தங்கள் உரிமைகளைத் தக்க வைத்துக் கொள்வதற்காகப் போராடுபவர்களாக அவர்களை மாற்றும். இறந்த கால வரலாறுகள் என்னும் குழிக்கற்கள் மீது சமகால வரலாறுகள் என்னும் 'மீட்சி' விண்ணுயர நிற்கும்.

சமகால வரலாறுகளைத் திறந்து காட்டுங்கள். மனித வாழ்க்கை இருப்புக்கான அசல் முகங்கள் இவை.


Related

குழந்தை வளர்ப்பு 1555131490061954630

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress