சிறுவர் கதை: 'எதிர் வீட்டு அக்கா'

பள்ளியிலிருந்து வந்த ஆர்த்தி புத்தகப்பையை மேசை மீது வைத்தாள். 

சோர்வாக இருந்த அவளைக் கண்ட அம்மா ஏதோ நடந்திருப்பதைப் புரிந்து கொண்டார். 

பெற்றவளாயிற்றே! குழந்தைகளைப் பற்றி அவளுக்கா தெரியாது?

சிறிது நேரம் கழித்து விசாரித்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்.

முகம், கை, கால் கழுவி வந்த ஆர்த்தி இன்னும் உற்சாகம் இழந்தே காணப்பட்டாள்.

"ஆர்த்தி! இந்தா பால்!" - நீட்டிய அம்மா சோபாவில் அமர்ந்தார். மகள் பாலைக் குடிக்கும்வரை அமைதியாக இருந்தார். அதன் பிறகு மென்மையான குரலில் கேட்டார்: "ஆர்த்திக் கண்ணு.. பள்ளியில் என்ன நடந்தது? ஏன் ஒரு மாதிரியா இருக்கே?"

கேட்டதுதான் தாமதம். ஆர்த்தி அம்மாவைக் கட்டிப் பிடித்து அழலானாள். அவள் அழுது முடிக்கும்வரை மௌனமாக இருந்தார் அம்மா. பிறகு, "என்னடா.. நடந்தது?" -  என்று தலையை வருடியவாறு விசாரித்தார்.

"அம்மா..! பிரதீப் எனக்கு என்ன வேணும்?"

"உனக்கு அவன் தம்பி முறை"

"நான் அவனுக்கு அக்காதானே?"

"ஆமா"

"ஆனா. எங்க கிளாஸ் டீச்சர் ஆர்த்தி உனக்கு என்ன வேணும்?னு கேட்டப்ப பிரதீப் எதிர்வீட்டு அக்கா!னு சொன்னாம்மா..!" - என்று கூறிவிட்டு மீண்டும் "ஓ" வென அழுதாள்.

"ஓ ஹோ! இதுதான் விஷயமா?" - அம்மா மகளை மடியில் கிடத்திக் கொண்டார்.

ஆறுதலாய் முதுகில் தட்டி விட்டார். அழுதுகொண்டிருந்த ஆர்த்திக்கு கோகிலா மாமி நினைவுக்கு வந்தார்.

 கோகிலா எதிர்வீட்டில் வாடகைக்கு வந்த போது, பிரதீப் கைக்குழந்தை. அம்மா, கோகிலா மாமிக்கு உதவியாகக் குழந்தையைப் பார்த்துக் கொள்வார். அக்கம்-பக்கத்தில் உள்ளவர்கள் அவர்கள் இருவரையும் சொந்தக்காரர்கள் என்றே நினைத்தார்கள். 

அம்மாவும் கேட்பவர்களுக்கு "என் தங்கை!" - என்று வாய் நிறையச் சொல்லுவார்.

ஒருமுறை. கோகிலா மாமிக்கு மஞ்சள் காமாலை வந்து, படுத்த படுக்கையாக இருந்தபோது, பிரதீப் முழுக்க முழுக்க இவர்கள் வீட்டிலேயேதான் இருந்தான். அம்மாதான் தினமும் குளிப்பாட்டி.. பாலூட்டி..சோறூட்டி..தூங்க வைத்து எல்லாம் செய்தார். ஆர்த்தியும் குழந்தை கூடவே இருந்தாள்.

வீட்டுக்கு யாராவது வரும்போது, "யார் இந்தப் பையன்?" - என்று ஆர்த்தியைக் கேட்டால்.. "எதிர்வீட்டுப் பையன்!" - என்று சொன்னால்.. அம்மாவுக்கு பயங்கரமான கோபம் வரும். "என்ன சொன்னே? எதிர்வீட்டுப் பையனா?" - "அவன் உன் தம்பி!" - என்பார்.

அப்புறம் ஆர்த்தி அம்மாவிடம் மன்னிப்புக் கேட்டாள்.

இப்படி சொல்லிச் சொல்லியே பிரதீப் தன் தம்பி என்னும் உணர்வு ஆழமாகப் பதிந்துவிட்டது அவளுக்குள்.

அதனால்தான் இன்று அவன் தன்னை எதிர்வீட்டு அக்கா என்றபோது, தாங்க முடியவில்லை. இப்போது அம்மாவின் மடியில் அவரது அணைப்பில் கொஞ்சம் கொஞ்சமாக மறந்துவிட்டாள்.

யாரோ கதவைத் தட்டும் சத்தம் கேட்டது. அம்மா எழுந்தார். ஆர்த்தியின் முகத்தை நிமிர்த்தி "இதுக்கெல்லாம் அழக்கூடாது! அவன் சின்னப் பையன். தெரியாமல் சொல்லியிருப்பான். எழுந்திரு.. முகம் கழுவிட்டு  ஹோம்வெர்க் செய்!" - என்று கூறிவிட்டு கதவைத் திறக்கப் போனார்.

பிரதீப்தான் வாசலில் நின்றான்.

"என்னடா பிரதீப் குட்டி?" - என்ற அம்மாவின் குரலைச் சட்டைச் செய்யாமல் ஆர்த்தியை நோக்கி ஓடிவந்தான்.

"ஆர்த்திக்கா..! இந்தக் கணக்கு புரியவே மாட்டேங்குது. சொல்லிக் கொடுக்கா. ப்ளீஸ்..!" - என்று கொஞ்சும் தன் மழலைக் குரலில் கேட்டபோது, ஆர்த்தி வேகமாய் வந்து அவனை அணைத்துக் கொண்டாள்.

"வாடா குட்டி..அக்கா சொல்லித்தர்றேன்!" - என்று அழைத்துச் சென்றாள்.

பார்த்துக் கொண்டிருந்த அம்மா முகத்தில் புன்னகை.

Related

சிறுவர் கதை 344809021560328120

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress