குழந்தை நலம்: 'காதுக் குருமியை அகற்றுவது எப்படி?'
http://mazalaipiriyan.blogspot.com/2013/03/blog-post_13.html
"காதுக் குருமி என்பது என்ன? அதை அகற்றுவது எப்படி?"-
பொதுவாக இது ஒரு மெல்லிய படலம் போல காதுக் குழாய் சுவரின் தோலில் படிந்திருக்கும். இதனால் கிருமிகள் தாக்குதல்களிலிருந்தும், சிறுகாயங்கள் உண்டாவதிலிருந்தும், நீர் போன்ற திரவங்கள் காதில் நுழையாமலும் பாதுகாக்கிறது. அத்துடன் காதை ஈரமாகவும் வைத்திருக்கிறது. அதிலுள்ள கிருமி எதிர்ப்பு (antibacterial properties) சக்தியானது காதின் உட்புறத்தில் நோயை ஏற்படுத்துவதையும் தடுக்கிறது.
ஆங்கிலத்தில் ‘செர்மன்’ (Cerumen) எனப்படும் காதுகுருமி உண்மையில் எண்ணெய் பிசுபிசுப்புக் கொண்ட ஒருவித திரவமாகும். சருமத்தில் உள்ள சில சுரப்பிகளால் (Sebaceous and Ceruminous glands) இது சுரக்கிறது. அவரவர் உடல் நிலைக்கு ஏற்ப இது திரவமாகவோ, திடமான கட்டியாகவோ இருக்கும்.
காது சுவரிலிருந்து உதிரும் சருமத் துகள்கள், துண்டு முடிகள் ஆகியவற்றுடன் கலந்து திடப் பொருளாக மாறும். காதுக்குருமி காதின் பாதுகாப்பிற்கு மிக அவசியமானது. நாள்தோறும் புதிதாக சுரந்து பழையது தானாகவே சிறிது சிறிதாக வெளியேறிவிடும்.
மென்மையான குருமி முகம் கழுவும்போதோ அல்லது குளிக்கும்போதோ நீருடன் கலந்து வெளியேறிவிடும் அல்லது காய்ந்து உதிர்ந்துவிடும். அதேபோல, சிலருக்கு, பல்வேறு காரணங்களால் வெளியேறாது உள்ளேயே தங்கி இறுகி விடுவதுமுண்டு.
காதுக்குழாய் குறுகலாக இருப்பதும் சற்று வளைந்து இருப்பதும் இதற்கு காரணமாகலாம். சிலருக்கு அது இறுகி, கட்டியாகி வெளியேறாமல் செவிக்குழாயின் விட்டத்தின் 80 சதவிகிதத்ததை அடைத்துக்கொண்டால் காது கேட்பது மந்தமாகும். ஒரு சிலருக்கு வலியும் ஏற்படலாம். வேறு சிலருக்கு கிருமித் தொற்றும் ஏற்படக் கூடிய வாய்ப்பு உள்ளது.
ஆண்டுதோறும் சுமார் 12 மில்லியன் அமெரிக்க மக்கள் இந்த பிரச்னையால் பாதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் மூன்றில் இருவருக்கு அதாவது 8 மில்லியன் பேருக்கு மருத்துவ ரீதியாக அதனை அகற்ற வேண்டிய தேவை ஏற்படுகிறது.
பஞ்சு முனையுள்ள இயர் பட்ஸ், சட்டைப் பின், குச்சி போன்றவற்றை காதுக்குள் விடுவதைப் போன்ற ஆபத்தான செயல் வேறெதுவும் கிடையாது. அவை காதிலுள்ள மென்மையான சருமத்தை உரசி காயங்களை ஏற்படுத்தும். அதன் பிறகு அந்த இடத்தில் கிருமி தொற்றிச் சீழ்ப் பிடிக்கக் கூடும் அல்லது அவை காதுக் குருமியை மேலும் உற்புறமாகத் தள்ளி செவிப்பறையைக் காயப்படுத்தலாம். இதனால் நிரந்தரமாக காது கேளாமல் போகவும் வாய்ப்புண்டு.
காதுக் குருமியை கரைத்து இளகவைத்தால் அது தானாகவே வெளியேறிவிடும் அல்லது உப்புத் தண்ணீர், சோடியம் பை கார்பனேட் கரைசல், ஆலிவ் ஆயில் திரவங்களையும் பயன்படுத்தலாம். அதற்கெனத் தயாரிக்கப்பட்ட பிரத்யே காது களிம்பு (Waxol, Cerumol) மருந்துகளும் கிடைக்கின்றன.
இவை பயனளிக்காவிட்டால் மருத்துவரை அணுக வேண்டும். அவர் சிறிய ஆயுதம் மூலமாகவே அல்லது நீரைப் பீய்ச்சி அடித்தோ வெளியேற்றுவார். வலியில்லாத மருத்துவம் இது. சில பிரத்யேகமான கருவிகள் மூலம் அல்லது உறிஞ்சி எடுக்கும் (Suction device) உபகரணம் மூலம் சுலபமாக அகற்றிவிடுவார்.
காதுக் குருமி வராமல் தடுக்க முடியுமா?
அடிக்கடி காதுக் குருமித் தொல்லை ஏற்பட்டால் அவர்கள் ஆண்டுக்கு ஒருமுறையோ அல்லது இரு முறையோ தகுந்த மருத்துவரைச் அணுகி ஆலோசனை பெறலாம்.