சாந்திவனத்து கதைகள்: 'அனுமதியின்றி எடுக்காதே!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/03/blog-post_14.html
பள்ளியிலிருந்து அப்போதுதான் கரடிக் குட்டிகள் வீட்டிற்கு திரும்பியிருந்தன. வீட்டினுள் நுழைந்ததும் அவற்றின் கண்ணில் பட்டது புத்ததம் புதிய சூட்கேஸ்! மேசை மீதிருந்த அதைச் சுற்றி நின்ற கரடிக் குட்டிகள், “யாருடையது இது?”-என்று ஒன்றை மற்றொன்று கண்களால் கேட்டுக் கொண்டன.
பழுப்பு நிறக் குட்டி, சூட்கேஸில் தொங்கிக் கொண்டிருந்த பெயரட்டையை வாசித்தது. குதூகலத்தால் சத்தமிட்டது.
“அய்..! பட்டிணத்து மாமா .. வந்திருக்கிறார்..!”
இதைக் கேட்ட கருப்புக் குட்டி, “ஆஹா..! பட்டிணத்து மாமா..”-என்று எகிறிக் குதித்தது. எல்லாவற்றையும் விடக் குட்டையாக இருந்த சின்னக்குட்டி, “ஆமாம்.. மாமா வந்திருக்கிறார்..”-என்று சொல்லிக் கொண்டே பையைக் கழற்றி சுவரில் மாட்டியது.
“டேய்..! சூட்கேஸில் என்ன இருக்கிறதென்று பார்ப்போமா?”-பழுப்பு நிறக் குட்டி சொன்னதும், கருப்புக் குட்டியோ, “என்னவாயிருக்கும்.. நமக்காக விளையாட்டுப் பொருட்கள்தான்.. இதோ..! சாவிகூட பக்கத்திலேயே இருக்கிறது பார்.. சீக்கிரம் திற..!”-என்றது.
சின்னக் குட்டி “வேண்டாம்” என்று சொல்லியும் அவை கேட்கவில்லை.
சூட்கேஸில் பல வண்ண நிறங்களில் அழகிய பொம்மைகள் இருந்தன.
சூட்கேஸில் பல வண்ண நிறங்களில் அழகிய பொம்மைகள் இருந்தன.
விமானம், ராக்கெட், பீரங்கி, சிப்பாய்.. வேட்டைக்காரன்.. பொம்மைகள் அவர்களின் ஆசையைத் தூண்டின.
“எனக்கு விமானம் வேண்டும்!”
“எனக்கு ராக்கெட்!”
“எனக்கு சிப்பாய்!”
“எனக்கு..”
பழுப்பு நிற கரடிக் குட்டியும், கருப்பு நிறக் கரடிக் குட்டியும் போட்டிப் போட்டுக் கொண்டு பொம்மைகளை அள்ளின.
சின்னக் கரடிக் குட்டியோ, “மாமாவின் அனுமதியின்றி எடுப்பது தவறு!”-என்று எச்சரித்தும் அவை கேட்பதாயில்லை.
அம்மா கரடியோ வீட்டு வேலைகளில் மூழ்கியிருந்ததால்.. கண்டு கொள்ளவில்லை.
ஒரு மூலையில் அமர்ந்த சின்னக் குட்டி வீட்டுப் பாடங்களைச் செய்யலாயிற்று.
சற்று நேரத்திற்கெல்லாம் மாமாக் கரடி உள்ளே நுழைந்தது. சூட்கேஸைத் திறந்து அமர்க்களப்படுத்திக் கொண்டிருந்த கரடிக் குட்டிகளிடம் சென்றது.
“ஏய்! வாலுகளே..! இது என்ன கோலம்..?”-என்று அதட்டியது.
“மாமா.! இந்த பொம்மைகளெல்லாம் எங்களுக்குத்தானே?”-என்று குட்டிகள் கேட்டதும், மாமா கரடியும், “ஆமாமா..” என்றது.
நான் வருவதற்குள் என்ன அவசரம்? சரி.. சரி.. நன்றாகப் படித்து முதல் மதிப்பெண் எடுக்கணும் தெரியுதா?”-என்று அறிவுறுத்தியது.
வீட்டுப் பாடங்களை சிரத்தையுடன் செய்து கொண்டிருந்த சின்னக் குட்டியிடம் சென்றது.
“குழந்தாய்! நீ ஏதும் பொம்மையை எடுக்கலையா..?”-என்று அன்பு ததும்பக் கேட்டது.
“இல்லை மாமா..! தங்கள் அனுமதியின்றி எப்படி எடுப்பது?”-என்று குட்டிக் கரடி திருப்பிக் கேட்டதும், மாமா கரடி சந்தோஷப்பட்டது.
“உன்னைப் பார்க்கும்போது, வெகுநாட்களுக்கு முன் வாழ்ந்த நம் பெரியார் ஒருவரின் வரலாறு நினைவுக்கு வருகிறது மகனே!”-என்றது மாமா கரடி.
அதைக் கேட்டதும் பொம்மைகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்த கரடிக் குட்டிகள் அதன் அருகில் ஓடிவந்தன.
“மாமா! அந்தக் கதையைச் சொல்லுங்களேன். உங்களிடம் நாங்கள் கதை கேட்டு ரொம்ப நாட்கள் ஆகின்றன.. ப்ளீஸ்!” – என்று கெஞ்சலாயின.
“மாமா! அந்தக் கதையைச் சொல்லுங்களேன். உங்களிடம் நாங்கள் கதை கேட்டு ரொம்ப நாட்கள் ஆகின்றன.. ப்ளீஸ்!” – என்று கெஞ்சலாயின.
அதற்குள் அம்மாக் கரடி, சுடச் சுடக் காப்பி கொண்டுவந்தது.
“ஆரம்பிச்சுட்டீங்களா? மாமாவும் மருமகனும் லூட்டியை…” – என்று சிரித்துக் கொண்டே சமையலறையில் நுழைந்தது.
“சொல்லுங்கள் மாமா!” – கரடிக் குட்டிகள் வற்புறுத்தலாயின.
காப்பியை குடித்து முடித்த கரடி சொல்ல ஆரம்பித்தது:
“குழந்தைகளே! நீண்ட நாட்களுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. இறைவனின் நல்லடியாரும், பேரறிஞருமான அவரின் சிறுவயதில் நடந்த சம்பவத்தில் நமக்கும் பாடமிருப்பதால்… இதை கவனமாக கேட்கணும்.
ஒருமுறை. ஏதோ விஷயமாக சிறுவராக இருந்த அப்பெரியாரும், அவருடைய தந்தையும் சாந்திவனத்திலிருந்து பக்கத்து வனத்துக்குப் போக வேண்டியிருந்தது.
முன்னால்.. சென்று கொண்டிருந்த தந்தையாரின் கையில் ஒரு கிளிக் கூண்டு இருந்தது. அதிலிருந்த கிளையை அவர் பிரியமாக வளர்த்து வந்தார். அதை எப்போதும் தன்னுடன் வைத்திருப்பார்.
வழியில் ஒரு வயல்காடு எதிர்பட்டது. பயிர் நன்றாக விளைந்து அறுவடைக்குத் தயாராக இருந்தது.
தந்தையார் நன்றாக முற்றியிருந்த இரண்டு நெற்கதிர்களைப் பறித்து கிளிக் கூண்டில் போட்டார்.
உடனே மகன் கேட்டார்:
“அப்பா! இது வேறு யாருக்கோ சொந்தமான வயல். அவருடைய அனுமதி இல்லாமல் நீங்கள் நெற்கதிரை எப்படி பறிக்கலாம்?”
ஆனால், அவருடைய தந்தையோ அதைச் சட்டை செய்யாமல் விறுவிறு என்று நடந்தார். நீண்ட தொலைவு நடந்த வந்த பின் திரும்பிப் பார்த்த அவர் திடுக்கிட்டார்.
பின்னால்.. மகனைக் காணவில்லை. பதறிவிட்டது அவர் உள்ளம். வந்த வழியே ஓட்டமும், நடையுமாய் தேடிக் கொண்டு சென்றார். வழியில் எந்த வயலில் நெற்கதிரைப் பறித்தாரோ அதே இடத்தில் தன் மகன் நிற்பதைக் கண்டு வியந்தார்.
“ஏன் மகனே இங்கேயே நின்று விட்டாய்? வா.. போகலாம்!”- என்று அழைத்தார்.
“நான் வரமாட்டேன்ப்பா..! இந்த வயலின் சொந்தக்காரர் வந்தபின் நாம் பறித்த நெற்கதிருக்காக அவரிடம் மன்னிப்புக் கேட்டபின்தான் நான் இங்கிருந்து நகர்வேன்!”
மகனின் உறுதியான வார்த்தைகள் அவரை அசைத்துவிட்டன.
மகனுடைய செயலால் கவரப்பட்டு வாரி அணைத்துக் கொண்டார். கிளிக் கூண்டில் போட்ட கதிர்களை வெளியே எடுத்த வயலில் எறிந்தார்.
“இவை நமக்கு வேண்டாம் மகனே! இனி இது போல தவறு நடக்காது! வா.. போகலாம்!” – என்று மகனை அழைத்தார்.
அதன்பின்தான் மகன் அங்கிருந்து நகர்ந்தார். தந்தையாரை தொடர்ந்து நடந்தார்.
கரடி கதையை முடித்தது. கரடிக் குட்டிகளை கவனித்தது.
அனுமதியின்றி அவசரப்பட்டு சூட்கேஸைத் திறந்ததற்காக பழுப்புக் கரடிக் குட்டியும், கருப்புக் கரடிக் குட்டியும் வருத்தப்பட்டன. வெட்கி தலை குனிந்தன.
இனி ஒருபோதும் அவ்வாறு செய்வதில்லை என்று முடிவெடுத்தன.
உங்கள் முடிவும் இதுதானே?