சாந்திவனத்து கதைகள்: "தாய் சொல்லைத் தட்டாதே..!"
http://mazalaipiriyan.blogspot.com/2013/03/blog-post_21.html
“சாந்திவனத்தைவிட்டு இவனை அனுப்பத்தான் வேண்டுமா? வழியெல்லாம் கொள்ளை – வழிப்பறிகள் நிறைந்திருக்கும்போது.. இது தேவையா?”-என்று கிழட்டு ஒட்டகம் கேட்டது.
சோகத்துடன் சுற்றி நின்றிருந்த மற்ற ஒட்டகங்களும் தங்கள் தலைவரின் கேள்வியை ஆமோதிக்கும் விதமாகத் தலையாட்டின.
“ஆம்..! என் மகனை அறிவு வனத்திற்கு கல்வி கற்க அனுப்பத் தீர்மானித்து விட்டேன். இதில் எவ்வளவு ஆபத்துகள் இருந்தாலும் சரி.. என் முடிவு மாறாது!”-என்ற தாய் ஒட்டகம் தொடர்ந்து சொன்னது:
“என் மகன் கல்வி – கேள்விகளில் சிறந்த ஞானம் பெற வேண்டும். அதைக் கொண்டு சாந்திவனத்து அறியாமைகள் அகலப் பாடுபட வேண்டும். இதுதான் என் வாழ்வின் லட்சியம்!”
இனி முடிவை மாற்ற முடியாது என்று தெரிந்துவிட்டது. அதனால், ஒட்டகக் கூட்டத்தின் தலைவனான கிழட்டு ஒட்டகமும் மற்றைய ஒட்டகக் கூட்டத்தாரும் எழுந்து நின்றன. ஒட்டகக் குட்டியை வழி அனுப்புவதற்காகப் புறப்பட்டன. சாந்திவனத்து எல்லைவரை கூடவே சென்றன.
வியாபாரத்திற்காக அறிவு வனத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருந்த குதிரை வியாபாரிகளிடம் ஒட்டகக் குட்டியை ஒப்படைத்த தாய் ஒட்டகம், அதை பத்திரமாக அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டது.
ஒவ்வோர் ஒட்டகத்திடமும்.. ஒட்டகக் குட்டி விடை பெற்றது.
“அம்மா! சென்று வருகின்றேன்! என்னை ஆசிர்வதியுங்கள்!” என்றது.
“மகனே! என் ஆசிகளும், பிரார்த்தனைகளும் என்றும் உனக்குண்டு. கவலைப்படாதே! கல்வியில் நன்றாக கவனம் செலுத்திப் படிப்பாயாக!”- என்ற தாய் ஒட்டகம் தொடர்ந்து சொல்லலாயிற்று:
“…. அருமை மகனே! நான் சொல்லப் போகும் ஓர் அறிவுரையை கவனமாகக் கேட்டுக் கொள்! எந்த நேரத்திலும் பொய்யைச் சொல்லாதே! உன் உயிரே போகும் ஆபத்து வந்தாலும் கூட பொய் சொல்லாதே!”
“ஆகட்டும் அம்மா! அப்படியே செய்கிறேன்!”
“…. வழியில் கொள்ளையர் பயமிருக்கும் ஜாக்கிரத்தை! உன் செலவிற்காகப் பணத்தை புத்தகப் பையில் புத்தகங்களிடையே திருடர்கள் சந்தேகப்படாத வகையில் மறைத்து வைத்திருக்கின்றேன். சென்று அறிவாளியாகத் திரும்புவாயாக!”
குதிரைகளுடன் ஒட்டகக் குட்டி புறப்பட்டது.
நீண்ட பயத்தில் களைப்புடன் சென்று கொண்டிருந்த அவற்றின் எதிரே திடீரென்று கொள்ளைக் கூட்டம் ஒன்று எதிர்பட்டது.
வழிப்பறிக் கொள்ளையர்களான கழுதைப் புலிகள் உறுமிக் கொண்டே பாய்ந்தன.
பயந்துபோன குதிரைகள் நடுங்கிக் கொண்டே தங்கள் உடமைகளை கொள்ளையர்கள் முன் எடுத்து வைத்தன.
ஒட்டகக் குட்டியிடம் வந்த கழுதைப்புலி ஒன்று “ஏய்! பொடியப்பயலே! நீ ஏதாவது வைத்திருக்கின்றாயா?”-என்று அதட்டியது.
“ஆமாம்..! வைத்திருக்கின்றேன்!” – என்று ஒட்டகக் குட்டி சகஜமாக பதிலளித்தது.
அதை நம்பாமல் “பொய்யா சொல்கிறாய்.. பொடிப்பயலே..!” – மிரட்டி விட்டு கழுதைப்புலி அங்கிருந்து அகன்றது.
சிறிது நேரம் கழித்து வந்த மற்றொரு கழுதைப்புலி, “டேய் பொடியனே! உன்னிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று கட்டைக் குரலில் கர்ஜத்தது.
“ஆம்..! இருக்கிறது! பழையபடியே ஒட்டகக்குட்டி சொன்னது.
ஆச்சரியப்பட்டுப் போன கழுதைப்புலி ஒட்டகக்குட்டியை தங்கள் தலைவனான முரட்டு கழுதைப்புலியிடம் அழைத்துச் சென்றது. நடந்ததை சொன்னது. தலைவனின் விசாரணை ஆரம்பித்தது:
“குட்டிப்பயலே! உண்மையைச் சொல்! என்ன இருக்கிறது உன்னிடம்?”
“பணம்!”
“என்ன?.... பணமா?... எங்கே..?”
“இதோ..! இந்தப் புத்தகப் பையில்!”
சோதனையிட்ட கழுதைப்புலி ஒட்டகக்குட்டி கூறியதைப் போலவே பணம் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டது. ஆச்சரியத்தால் வாயடைத்துப் போனது. பிறகு மென்மையான குரலில் கேட்டது:
“குழந்தாய்! உன்னிடம் பணமிருப்பதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. அப்படியிருந்தும் நீ உண்மையைக் கூறிட என்ன காரணம்?”
“அய்யா! நான் புறப்படும் முன் என் தாயாரிடம் எந்த நிலையிலும் நான் பொய் சொல்வதில்லை என்று சத்தியம் செய்திருக்கின்றேன். அப்படியிருக்க நான் கொடுத்த வாக்கை எப்படி மீற முடியும்?” ஒட்டகக்குட்டி அடக்கத்துடன் பதில் அளித்தது.
கொள்ளைக் கூட்டத் தலைவனான கழுதைப்புலி மௌனமானது. வயதான அதன் தாயாரின் முகம் நினைவில் வந்தது. “எத்தனை முறை என் தாய் என்னிடம் திருடாதே! கொள்ளையடிக்காதே! பிறர் பொருளை விரும்பாதே! உழைத்து வாழ்!”-என்று அறிவுறுத்தியிருக்கிறாள்! நானும் அவளை சமாதானப்படுத்த பலமுறை பொய் சத்தியம் செய்திருக்கின்றேன். இந்தச் சின்ன ஒட்டகக்குட்டிக்கு இருக்கும் குணம்கூட என்னிம் இல்லாமல் போய்விட்டதே!”- என்று மனதிற்குள் அழுது புலம்பலாயிற்று. இனியும் தாய் சொல்லை மீறுவதில்லை என்று தீர்மானித்தது. கண்களைத் துடைத்துக் கொண்டது.
வியாபாரிகளான குதிரைகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட பணமும்-பொருளும் உடன் திருப்பி தரப்பட்டது.
அன்றிலிருந்து கழுதைப்புலிகள் கொள்ளைத் தொழிலுக்கு முழுக்குப் போட்டுவிட்டன. உடல் வியர்க்க உழைத்து வாழ ஆரம்பித்தன.