சாந்திவனத்து கதைகள்:'சொல்வதைச் செய்யவும்..!'




சாந்திவனத்து வேப்பமரத்தில் கூடுகட்டி வசித்து வந்த காகங்கள் வருத்தத்துடன் காணப்பட்டன.

“எவ்வளவு சொன்னாலும் இந்தப்பயல் கேட்கமாட்டேன் என்கிறானே!”- பெண் காகம் சலித்துக் கொண்டது.

“நானும் எவ்வளவுதான் அடித்துக் கண்டிப்பது? அப்போதுகூட அவன் பொய் பேசுவதையும், திருடுவதையும் விடவில்லையே..!..ம்…” ஆண் காகம் மிகவும் கவலையுடன் சொன்னது.
 
“பள்ளிக்கூடத்திலிருந்து தினந்தோறும் இவனைப் பற்றிப் புகார்கள் வந்துகொண்டேயிருக்கின்றன. சக மாணவர்களின் பேனா, பென்சில் போன்றவைகளைத் திருடிவிடுகிறானாம். எடுத்ததற்கெல்லாம் பொய் பேசிகிறானாம்!”

“இவனுக்கு என்ன ஆனதென்றே தெரியவில்லை. குளக்கரையோரமிருக்கும் மருத்துவர் வைத்தியத்துடன் மனோதத்துவமும் படித்தவராம். அவரிடம் நம் பிள்ளையை அழைத்துச் சென்று காட்டலாம். கவலைப்படாதே!” – ஆண் காகம் மனைவிக்கு ஆறுதல் சொன்னது.



அடுத்தநாள்_

குளக்கரையோரம் வைத்தியம் பார்த்து வந்த கொக்கிடம் காக்கைக் குஞ்சை காகங்கள் அழைத்துச் சென்றன.

காகங்கள் சொன்னதை ஒன்றுவிடாமல் கொக்கு பொறுமையுடன் கேட்டது. இடைஇடையே சில குறிப்புகளையும் எடுத்துக் கொண்டது. சற்று நேரத்திற்குப் பிறகு, இரு காகங்களையும் வெளியே அனுப்பிவிட்டது. காக்கைக் குஞ்சை அன்புடன் விசாரிக்க ஆரம்பித்தது. ‘பொய் சொல்லவும், திருடவும் காரணம் என்ன?’- என்று நுணுக்கமாக ஆராயந்தது. கொக்கு ஒரு கைத்தேர்ந்த மருத்துவராக இருந்ததால்.. காரணத்தைச் சீக்கிரமே அறிந்து கொண்டது.



பிறகு, “குழந்தாய்..! சற்று நேரம் வெளியே அமர்ந்திரு. அப்பாவை உள்ளே அனுப்பி வை!”-என்று காக்கைக்குஞ்சிடம் வாஞ்சையுடன் சொன்னது.

ஆண் காகம் உள்ளே வந்து அமர்ந்ததும், “உங்கள் பிள்ளையின் குறைபாடுகளுக்கான அடிப்படைக் காரணத்தை கண்டுபிடித்துவிட்டேன். இப்போது உங்களிடம் சில விஷயங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும். நீங்களும் ஒளிவுமறைவின்றி பதில் சொல்ல வேண்டும்!” – என்றது கொக்கு.

“தாராளமாகக் கேளுங்கள் டாக்டர்!”-என்று காகமும் பதில் அளித்தது.

“….. இது உண்மைதானா?”

கொக்கு சொன்ன விஷயத்தைக் கேட்டதும், “ஆமாம்..! “ என்ற பாவனையில் தலையாட்டிவிட்டு காகம் மௌனத்துடன் தலைகுனிந்து கொண்டது. அந்த விஷயத்தை நினைவுபடுத்திக் கொண்டது.



அன்று ..

பெண் காகம் பக்கத்துக் காட்டில் வசித்து வந்த உறவினர் வீட்டு விசேஷ நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளச் சென்றிருந்தது. ஆலமரத்தில் வசித்து வந்த காக்கையும், பக்கத்து சவுக்குத் தோப்பில் குடியிருந்த மற்ற காக்கைகளும் வேப்பமரத்திற்கு வந்த அந்த யோசனையைத் தெரிவித்தன. காக்கைக்குஞ்சு பள்ளிக்குச் சென்றிருந்த சமயம் பார்த்து அந்த யோசனை செயல்பட்டது. விருந்தும், வேடிக்கையுமாய் வேப்பமரம் அமர்க்களப்பட்டது.

மது அருந்திய போதையில் காக்கைகள் சீட்டாட்டம் ஆட ஆரம்பித்தன. அந்தச்சமயம் பார்த்து பள்ளியில் எதற்கோ லீவு விட்டுவிட்டார்கள் என்று திடுப்பென்று காக்கைக்குஞ்சு  அங்கு வந்து சேர்ந்தது. அதைக் கண்டதும் அப்பா காகத்திற்கு கைக்கால் ஓடவில்லை. மனைவிக்கு, தான் குடித்து கும்மாளம் செய்த விஷயம் தெரிந்தால்.. அவ்வளவுதான் சாந்திவனம் நடு நடுங்விடும் அளவுக்கு கூச்சல் போடும்! பயந்து போன அப்பா காகம், “நடந்ததை சொல்ல வேண்டாம்! மீறிச் சொன்னால்… தொலைத்துவிடுவேன்!”-என்று காக்கைக்குஞ்சை மிரட்டியது.



“என்ன காக்கையாரே..! நினைவெல்லாம் எங்கேயோ சென்றுவிட்டதைப் போலிருக்கிறதே!”- கொக்கின் குரல் கேட்டு காகம் சுயநினைவுக்கு வந்தது.

“…ஒரு தவறை மறைத்து நீங்கள் பொய் சொன்னதுடன் உங்கள் பிள்ளையையும்.. பொய் சொல்ல தூண்டியிருக்கிறீர்கள். அன்று பொய் உங்களால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. உங்கள் பிள்ளை பொய் சொல்லவும் இதுவே காரணமாகிவிட்டது. நீங்கள் பொய் என்று எதை போதித்தீர்களோ அதன்படிச் செயல்படவில்லை. இனியும் இத்தகைய தவறுகளைச் செய்யக்கூடாது!” – என்று அறிவுறுத்தியது கொக்கு.

“உங்கள் மனைவியிடமும் சிறு விசாரணை இருக்கிறது. நீங்கள் சென்று அவரை அனுப்புகிறீர்களா?”- என்றது தொடர்ந்து.



எதிரே வந்தமர்ந்த பெண் காகத்திடம், கொக்கு மென்மையாகப் பேச ஆரம்பித்தது.

“உங்கள் வீட்டுக்காரர் ஆபீஸிற்குச் சென்றிருந்த சமயங்களில் அவருக்குத் தெரியாமல் சினிமாவிற்று சென்றுவிட்டு, தோழிகளின் வீட்டிற்குச் சென்றிருந்ததாக நீங்கள் கூறிய பொய் உங்கள் பிள்ளையை பாதித்துள்ளது, திருடுவது தவறு என்று போதிக்கும் நீங்கள் உங்கள் கணவரின் சட்டைப் பையிலிருந்து அவருக்குத் தெரியாமல் திருடுவது எப்படிச் சரியாகும்? போதனைகள் ‘சும்மாத்தான்!’ அறிவுரைகள் வெறும் ‘கண்துடைப்புத்தான்!’ – என்ற நினைப்பை உங்கள் பிள்ளையின் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டுள்ளன. நாம் சொல்வதைச் செய்து காட்டவில்லை!” – அசலான தவறைக் கொக்கு சுட்டிக்காட்டியதும் பெண் காகம் தவறை உணர்ந்தது.

கடைசியாக, காக்கைகளையும், காக்கைக்குஞ்சையும் ஒன்றாக இருத்திக் கொக்கு அறிவுறுத்தியது:

“பிள்ளைகளுக்கு நல்ல உதாரணமாகப் பெற்றோர்கள் விளங்க வேண்டும். போதனைகளின் முழு வடிவங்களாக அவர்கள் வாழ்ந்து காட்ட வேண்டும். இதன்மூலம்தான் பெற்றோர்களைப் பின்பற்றிப் பிள்ளைகளும் நல்லவர்களாக நடப்பார்கள்.

மகனே! பொய் சொல்வதும், திருடுவதும் தவறான செயல்கள். நம்மை இழிவான பாதையில் தள்ளிவிடுபவை அவை.

இன்றிலிருந்து பெற்றோர்களின் பேச்சைத் தட்டாமல் கேட்டு வருவாயாக!”

காக்கைகள் தங்கள் தவறைப் புரிந்துகொண்டன.

கொக்கிற்கு நன்றி கூறிவிட்டு அவை பறந்து சென்றன. பெற்றோரைப் பின்பற்றி காக்கைக்குஞ்சும் பின்தொடர்ந்து பறந்து சென்றது.






Related

சாந்திவனத்து கதைகள் 9195212117192622512

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress