குழந்தை இலக்கியம்: 'வெற்றி அடையும் வழி!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/03/blog-post_28.html
உழவன் அதிகாலையிலேயே புறப்பட்டுவிட்டான்.
தோளில் மண்வெட்டியை மாட்டிக் கொண்டு, கட்டுச் சாதம் கட்டிக் கொண்டு சுறுசுறுப்புடன்
பயணப்பட்டான்.
மேடு – பள்ளங்கள், கற்கள் – முட்கள், எதையும்
சட்டை செய்யாமல் விறுவிறு என்று நடந்தான்.
வெகுதூரம் நடந்தபின் கண்களைக் கூர்மையாக்கி
உற்றுக் கவனித்தான். மண் வெட்டியால்.. பூமியின் மேற்பரப்பைச் சில இடங்களில் கொத்தினான்.
திருப்தியில்லாமல் உதடுகளை பிதுக்கிக் கொண்டான்.
தொடர்ந்து நடந்தான்.
இன்னும் சில இடங்களில் ஒரு பிடி மண்ணை அள்ளி
எடுத்து ஆராய்ந்தான். அதை லேசாகச் சுவைத்தும் பார்த்தான். அந்த மண்ணை கீழே கொட்டிவிட்டு
மேலே நடந்தான். இப்போதும் உழவனுக்கு திருப்தி ஏற்படவில்லை.
உச்சி நேரமும் வந்தது.
கட்டுச் சாதத்தை எடுத்துக் கொண்டு ஒரு மர
நிழலில் ஒதுங்கினான். பகலுணவை உண்டு முடித்தான். உடல், சற்று ஓய்வெடுத்தால் தேவலை என்று
நினைத்தாலும்.. மனம் அதற்கு அனுமதிக்கவில்லை.
உழவன் மீண்டும் தன் பணியில் மூழ்கினான்.
காலையிலிருந்து.. உழவன் படும் துன்பங்களை
எல்லாம் காற்று பார்த்துக் கொண்டிருந்தது. அவனுடைய செய்கை புரியாமல் விழித்தது.
“என்ன செய்கிறான் இவன்?” – என்று தன்னைத்
தானே கேட்டுக் கொண்டது. தொடர்ந்து உழவனையே கவனிக்கலாயிற்று.
ஆயிற்று.. மாலையும் வந்தது.
சூரியன் மேற்கு வானில் மறைந்து கொண்டிருந்த
வேளையில்.. உழவன்,
“ஆஹா..! கண்டுபிடித்துவிட்டேன். இதுதான்
நான் தேடிய நிலம்!”- என்று பெரும் புதையலைக் கண்டதைப் போல மகிழ்ந்து கூச்சல் போட்டான்.
சுற்றி நோட்டம் விட்டவன் அருகில் நீர்நிலை
இருப்பதையும் கண்டு முழுத் திருப்தி அடைந்தான். நிலத்தைச் சுற்றி அடையாளமிட்டு வீட்டை
நோக்கி நடந்தான்.
காற்றுக்கு ஒன்றும் புரியவில்லை. “சரி..
மறுநாள் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்..!” – என்று அமைதி அடைந்தது.
அடுத்த நாள்.
உழவன் மீண்டும் வந்தான்.
நிலத்தைச் சுற்றி வேலியிட்டான். அதற்கடுத்த
நாள்களில் வெகுவேகமாகச் செயல்பட்டான்.
- நிலத்தை உழுது பண்படுத்துவது..
- விதைப்பது..
- நீர் பாய்ச்சுவது..
- உரமிடுவது..
- களை எடுப்பது..
- மருந்து தெளிப்பது
- வேகமாக முனைப்புடன் அவன் செயல்பட்டான்.
“ஓ..! இதற்காகத்தான் இந்தப் பைத்தியம் அலைந்து
திரிந்ததா..?” – என்று ஏளனமாகச் சிரித்த காற்று உழவனைப் பார்த்துச் சொன்னது:
“முட்டாள் உழவனே! இதற்காகவா.. இவ்வளவு சிரமப்பட்டாய்?
இடம் இடமாய் தேடி அலைந்தாய்? பொழுதெல்லாம் மண்ணில் புரண்டாய்? ஒரு நொடியில் உன் பணியைச்
செய்து முடிக்கிறேன் பார் முட்டாள் உழவனே..!”
எக்காளமிட்ட காற்று சற்று நேரத்தில் சுழல்..
சுழலாய்க் கிளம்பி வீசியது. அதன் வேகத்தைத் தாங்காமல் பூமியில் வீழ்ந்து கிடந்த ஏதேதோ
விதைகள் மேலெழுந்து பறந்தன. எங்கெங்கோ சென்று விழுந்தன. தகுந்த இடமில்லாமல், நீரில்லாமல்..
பல விதைகள் மடிந்தன. சில விதைகள் முளைவிட்டு வளர்ந்தன.
ஒருபுறம்,
உழவனின் கடின உழைப்பால்.. திட்டமிடப்பட்டு
உருவான வயல்வெளிகள் பச்சைப் பசேல் என்று வளர்ந்திருந்தன. அதை ஒட்டி தென்னை, மா என்று
அடர்ந்த தோப்புகள் செழித்திருந்தன.
மறுபுறம்,
காற்றின் சுழல்கள் கொண்டு சென்ற விதைகள்
முட்செடிகளாய்ச் சீரில்லாமல் வளர்ந்தன. சில நாளில் காடாய் மண்டிப் பெருகின.
இப்போது உழவன் காற்றைப் பார்த்துச் சிரித்தான்.
அதன்பின் சொன்னான்:
“யார் முட்டாள் என்று தெரிகிறதா?” எதற்கும்
பயனற்ற.. நீ உருவாக்கிய முட்புதர்களா..? அல்லது செழித்து வளர்ந்து பலன் தந்து கொண்டிருக்கும்
வயல்வெளிகள்.. தோப்புத்துறவுகளா..? இவற்றில் எவை உயர்வானவை..?”
காற்று வெட்கித் தலை குனிந்தது.
தங்கள் லட்சியத்தை அடைய உழவனாய்.. குறிக்கோளுடன்
.. பெரும் முனைப்புடன் செயல்பட்டால் வெற்றி அடையலாம்!
குறிக்கோள் இல்லாமல் காற்றின் சுழல்களாய்
செயல்பட்டால் ..தோல்வியைத்தான் தழுவ வேண்டியிருக்கும்.
இனி காற்றின் சுழல்களா..? அல்லது உழவன்களா
? என்பதை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும்.