குழந்தை இலக்கியம்:' பாதுகாப்பு அரண்கள்'அந்த மலை உச்சியில் ஒரு கோடை வாசஸ்தலம் அமைந்திருந்தது.

பல கிடு.. கிடு.. பள்ளங்களையும், பயங்கர வளைவுகளையும் கடந்துதான் மலை உச்சிக்குச் செல்ல முடியும். அதை உணர்த்தி எச்சரிக்கும் வகையில் பாதையோரம் அநேக எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டிருந்தன.

அந்த வழியே மலை உச்சியை நோக்கி அடிக்கடி ஒரு கார் செல்லும். புத்தம்.. புதியதும்.. அழகிய நிறம் கொண்டதுமான அதன் அழகே அழகு! அது அந்தப் பக்கம் போகும் போதெல்லாம் பாதையோர எச்சரிக்கைப் பலகைகளுக்கு ஒரே நடுக்கம்தான்!

“இந்த பயல் ஏன் இவ்வளவு பறக்கிறான்? முட்டாள்!”- என்று வேகத்தடை எச்சரிக்கைப் பலகை சொன்னதும்,

“ஆமாம்! அழகுக்கேத்த அறிவு இந்த மடையனிடம் இல்லை!”-என்று சக எச்சரிக்கைப் பலகை கோபப்படும்.

பாதுகாவல் தடுப்பு வேலியோ, “இவனுக்குப் பட்டால்தான் புரியும்..” – என்று சலித்துக் கொள்ளும்.

ஆனால், காருக்கோ ஒரே எரிச்சல். “சீறிவரும் என்னை இந்த மடையர்கள் அடிக்கடி தடுத்துத் தொல்லைப்படுத்துகிறார்களே!” – என்று மனதிற்குள் கோபம் பொங்கும்.

காரின் தவறைப் பொறுக்கமாட்டாமல் வேகத்தடைகள் ஒருநாள் வாய்விட்டே சொல்லிவிட்டன.

“மெதுவாக… நிதானமாக… தம்பி… பார்த்துப் போ.. தம்பி..!அசம்பாவிதம் ஏதாவது நடத்துடப் போகுது!”

“என் வேகத்தைத் தடை செய்யும் சனியன்களாக நின்று கொண்டு அறிவுரை வேறேயா.. ச்… சீ.. தள்ளி நில்லுங்கள்..!”- கார் படபடத்தது.

“தம்பி! நாங்கள் உன் பாதுகாப்பிற்காகத்தான் நிற்கிறோம் என்பதை மறந்துவிடாதே!”

“ஆமாம்.. பெரிய பாதுகாப்பு.. இந்தக் காற்றுப் பயலுடன் போட்டிப் போட்டுக் கொண்டு செல்லலாம் என்றால்.. நீங்கள் நந்திகளாக வந்து மறிக்கிறீர்களே! உபதேசம் போதும் வழியை விடுங்கள்!” – அதட்டிவிட்டு, கார் வேகமெடுத்தது.

“இவன் திருந்தவே மாட்டான் போலிருக்கிறது!” – என்றது ஓர் எச்சரிக்கைப் பலகை.

“பட்டால்தான் தெரியும்!” – என்றது மற்ற எச்சரிக்கைப் பலகை.

“விபரீதம் வரும் முன் காத்துக் கொள்பவனே புத்திசாலி!”- என்றது பாதுகாப்பு வேலி.

ஒரு காலைப்பொழுது.

லேசான பனி மூட்டம்.

தங்களுக்குப் பழக்கமான குரலைக் கேட்டு பாதையோர எச்சரிக்கைப் பலகைகள் சுறுசுறுப்படைந்தன. அதற்குள் விழித்துக் கொண்ட பாதுகாப்பு வேலியும் பாதையில் கவனத்தைத் திருப்பியது.

தொலைவில் பனிப் படலத்தைக் கிழத்துக் கொண்டு அசுர வேகத்தில் கார் வந்து கொண்டிருந்தது. கண் மூடிக் கண் திறப்பதற்குள் அது நடந்துவிட்டது. 


வளைவில் திரும்ப வேண்டிய கார், பாதுகாப்பு வேலியின் மீது மோதி வரிசையாக எச்சரிக்கைப் பலகைகளையும் சரித்தது.

“அய்யோ..!” – என்று அலறியவாறு அவை தரையில் சரிந்தன.

மோதிய வேகத்தில் நிலைகொள்ளாமல் மீண்டும் பாதுகாப்பு வேலியின் மீது கார் மோதியது. பாதி வேலி சரிந்திட … கீழே கிடு.. கிடு.. பள்ளத்தாக்கு காரை இரு கரம் நீட்டி வரவேற்கத் தயாரானது,

முன்பக்கமெல்லாம் நசுங்கி.. உடலெங்கும் சொட்டைகளாகி… பரிதாபமாகக் கார் முழித்தது.

தடுப்பு வேலிக்கு பலமான அடி. கார் மீது பயங்கரமான கோபம் வந்தும் பொறுத்துக் கொண்டது. சமாளித்துக் கொண்டு, பள்ளத்தாக்கில் கார் சரியாமல தடுத்துவிட்டது.

“அம்மா…! அப்பா…!” – முக்கி முனகிக் கொண்டிருந்த காரிடம்,

“தம்பி! சொன்னதைக் கேட்டாயா? நாங்கள் நிற்பது உன்னுடைய பாதுகாப்புக்குத்தான் என்பதை இப்போதாவது உணர்ந்தாயா?”-என்றது வேலி.

“அய்யோ..! அம்மா…. அப்பா..ய்…ய்….” – அழுது கொண்டே கார்,

“அண்ணே! உணர்ந்து கொண்டேன்! தடுப்புகள் என் பயணத்தின் இடையூறுகள் என்று தவறாக எண்ணிவிட்டேன். அவை உண்மையில், பத்திரமான.. பாதுகாப்பான பயணத்திற்காகத்தான் என்று இப்போது உணர்ந்து கொண்டேன். நான் திருந்திவிட்டேன். என்னை மன்னித்துவிடுங்கள்.. அய்யோ.. அம்மா.. வ்…வ்;..” – வருத்தம் தெரிவித்துக்கொண்டே கார் மலைப்பாதையில் மெதுவாக சென்றது.

அதன்பின் அது வேகமாகச் செல்வதையே மறந்துவிட்டது. 


Related

குழந்தை இலக்கியம் 7051401595256927577

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress