குழந்தை இலக்கியம்: 'தேவை உள்ளவர்களுக்காக..'



நீல வண்ண பிளாஸ்டிக் டப்பாவைப் பார்க்கும் போதெல்லாம் இனியனுக்கு சந்தோஷமாக இருக்கும். சில நேரங்களில் அதை எடுத்து அசைத்துப் பார்ப்பான். உள்ளே குலுங்கும் நாணயங்கள் அவனுக்கு இன்னும் மகிழ்ச்சியளிக்கும். புன்முறுவல் பூப்பான். மார்போடு அணைத்துக் கொள்வான். பத்திரமாக எடுத்து வைப்பான். சில நாளில் கிடைக்க இருக்கும் பரிசை நினைத்தாலே அவனுக்கு உள்ளமெல்லாம் மகிழ்ச்சியால் பூரித்துவிடும். 

"இனியா..! மகனே..! இதோ...! உனக்கு சேமிப்பதற்காக ஓர் அருமையான டப்பா தருகின்றேன். தினமும் உன் 'பாக்கெட் மணி'யின்  ஒரு கணிசமான பகுதியைச் சேர்த்து வா..! அடுத்த வருடத்திற்குள் உன் சேமிப்புப் பணத்துடன் நானும் பணம் போட்டு உனக்கு ஓர் அழகான சைக்கிள் வாங்கித் தருகிறேன்!"

போன வருடம் அப்பா சொன்ன வார்த்தைகள் பசுமையாக மனதில் பதிந்து விட்டிருந்தன. அடுத்த நாளிலிருந்தே அவன் சேமிப்பதைத் துவக்கிவிட்டான். 'சைக்கிளுக்காக' என்று எழுதி டப்பாவில் ஒட்டினான். தினமும் அப்பா தரும் 'பாக்கெட் மணி'யை டப்பாவில் போட்டு வந்தான்.

விரைவில் எதிர்ப்பட இருக்கும் புத்தாண்டிற்காக இனியன் ஆவலுடன் காத்திருந்தான். ஒவ்வொரு நாளும் கழியக் கழிய அவனுக்கு உற்சாகம் அதிகரித்தது. முதுகில் பையை மாட்டிக் கொண்டு சலவை செய்த சீருடைகளுடன் "டிரிங்.. டிரிங்.." பெல் சத்தத்துடன் பள்ளிக்கு விரையும் கோலம் அடிக்கடிக் கண்ணில் தெரிந்தது. இன்னும் சில நாளில், 'புளி மூட்டையாய் பஸ்ஸில் திணிப்பு இல்லை!' 'கசங்கல்கள் இல்லை!' வியர்வை நாற்றமில்லை!' 'உஷ்ணமான சுவாசம் இல்லை!' - என்னும் நினைப்புகள் அவனை சந்தோஷப்படுத்தின. 

"சைக்கிள் வாங்கிவிட்டால் மட்டும் போதுமா? ஓட்டவும் தெரிய வேண்டுமே!" - அதற்கும் அப்பா உற்சாகமளித்தது சந்தோஷத்தை அளித்தது.

பள்ளித் தோழன் செல்வத்தின் துணையுடன் வாடகை சைக்கிளை எடுத்தான். சைக்கிள் ஓட்டப் பயிற்சி செய்தான். 

பயிற்சி ஒன்றும் சாதாரணமானதாக இல்லை.  ஹாண்டில் பாரைப் பிடித்தால்.. பெடலை மிதிக்க முடியவில்லை. பெடலை தொடர்ந்து மிதித்தாலோ எதிரே பார்க்க வரவில்லை. 

ஓராயிரம் இடுப்புக் கோணல்களுடன் பலமுறை விழுந்து எழுந்தான்.  கை - கால்களில் ஏகப்பட்ட சிராய்ப்புகள். இரவுகளில் வலியால் துடித்தும் போயிருக்கின்றான். தனக்கு விரைவில் கிடைக்கவிருக்கும் புது சைக்கிள் நினைவுகள் வலியை கண நேரத்தில் பறக்கச் செய்துவிடும்.

உணவு இடைவேளை.

இனியனும், செல்வமும் பள்ளி மைதானத்தின் மரநிழலில் அமர்ந்து உணவு உண்டு கொண்டிருந்தார்கள். சற்றுத் தள்ளியிருந்த மரத்தின் பக்கம் டிபனுடன் ராமு ஊர்ந்து கொண்டிருந்தான். வெய்யில் சற்று அதிகமாக இருந்ததால் அவன் வேதனை முகத்தில் தெரிந்தது.

"பாவம்டா... ராமு..! நல்ல காலிருக்கிற நமக்கே பள்ளிக்கு வந்துட்டுப் போறது எவ்வளவு சிரமமாயிருக்கு! இவன் எப்படித்தான் வரானோ..?" - என்றான் இனியன் வருத்தத்துடன்.



"படிப்பு மேல இருக்கிற ஆர்வத்துலே எல்லா கஷ்டத்தையும் பொறுத்துகிட்டு வர்ரவண்டா அவன்!" - என்று செல்வம் ராமுவைப் பாராட்டினான்.

"சின்ன வயசுலே.. அவனுடைய பெற்றோர் சரியான முறையிலே தடுப்பு ஊசியெல்லாம் போட்டிருந்தாங்கன்னா இந்த ஊன நிலையைத் தவிர்த்திருக்கலாமில்லே செல்வம்?"

"ஆமாண்டா! தடுத்திருக்கலாம்தான்! பாவம்.. அவங்க அப்பா - அம்மா படிக்காத ஏழைங்கடா... நானிருக்கிற தெருவிலேதான் அவங்க குடிசையும் இருக்கு. அவனுக்கு ஒரு மூன்று சக்கர சைக்கிள் வாங்கித்தர எவ்வளவு கஷ்டப்படுறாங்க தெரியுமா? முடியலே! நேத்துக்கூட அவங்கம்மா எங்க வீட்டுக்கு வந்து எங்கம்மாவிடம் இதைச் சொல்லி ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாங்க..!"

அதன்பின் இனியன் பேசவேயில்லை. மௌனமாகி, தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்துவிட்டான். இரவுகூட நெடுநேரம் அவன் தூங்கவேயில்லை! அடிக்கடி ராமு கனவுகளில் தவழ்ந்து கொண்டிருந்தான். வெய்யிலில் அவன் அனுபவிக்கும் வேதனை தெரிந்தது. புரண்டு... புரண்டு படுத்தான். அவனை அறியாமலேயே தூங்கியும் போனான். 

"இனியா..! எடுத்து வா உன் சேமிப்பை..!" அப்பா கூப்பிட்டதும் இனியன் டப்பாவுடன் விரைந்தான். 

பிளாஸ்டிக் டப்பா கனத்தது.

"நாளைக்கு சைக்கிள் வாங்கிடலாம்.. அதை இப்படி கொடு! உன் சேமிப்பு எவ்வளவு என்று பார்ப்போம்!"

அப்பாவின் நீட்டிய கரங்களில் டப்பாவைத் திணித்த இனியன் கரகரத்த குரலில் சொன்னான்:

"அப்பா! எனக்கு சைக்கிள் வேண்டாம்பா..! அதுக்குப் பதிலாக ராமுவிற்கு வசதியா ஒரு மூணு சக்கர சைக்கிளை வாங்கிக் கொடுத்திடலாம்!" - அழுது கொண்டே ராமுவைப் பற்றி விளக்கினான். அவனுக்கு எப்படியாவது ஊனமுற்றோர் பயன்படுத்தும் சைக்கிளை வாங்கித் தரும்படி கெஞ்சினான். 

மகனுடைய இளகிய மனமும், சேவை மனப்பான்மையும் அவன் தந்தையைக் கவர்ந்தன. அவனைக் கட்டி அணைத்து உச்சி மோந்தார். "நிச்சயம் வாங்கித் தருகிறேன் மகனே!" - என்று உறுதியும் அளித்தார்.

இதைக் கேட்ட இனியனுக்கு உள்ளமெல்லாம் இனித்தது. சந்தோஷத்தால்... துள்ளினான். மூன்று சக்கர சைக்கிளில் சிரித்துக் கொண்டே ராமு பள்ளிக்கு வருவது கற்பனையில் தெரிந்தது. "டிரிங்...! டிரிங்..!"- சைக்கிள் பெல் அடிக்கும் ஓசை கேட்கும் பிரமை ஏற்பட்டது.

டப்பாவிலிருந்த பணத்தை அப்பா எண்ணிக் கொண்டிருக்க ... இனியனோ, காலி டப்பாவுடன் படிக்கும் அறைக்குள் நுழைந்தான். அதில் சைக்கிளுக்காக - என்று எழுதி ஒட்டியிருந்த தாளைக் கிழித்தான். தேவை உள்ளோருக்காக.. என்று எழுதி மறுபடியும் ஒட்டினான். முன்னைவிட அதிகமாகச் சேமிக்க முடிவெடுத்தான்.







Related

குழந்தை இலக்கியம் 3376112336875253386

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress