குழந்தை வளர்ப்பு – 02, 'ஒவ்வொருவரும் பொறுப்பாளரே!'


கோடானு கோடி கிரகங்கள்; துணை கிரகங்கள் கொண்ட ‘பால்வெளி பெரு அண்டம்!’. அதில் கடலோரத்து மணல் துகள் போன்ற அளவுள்ள பூமி! இந்த ‘துகளுக்குள்’ வசிக்கும் ஊர்வன, பறப்பன, நடப்பன போன்ற பல்வேறு உயிரினங்கள்!
உயிரினங்கள் வாழ்வதற்கு வசதியாக சரியான அளவில் சாய்ந்துள்ள பூமி!
சூரியனுக்கும் – பூமிக்கும் இடையிலுள்ள துல்லியமான இடைவெளி!
சூரிய கதிர்வீச்சுகளால் உயிரினம் பாதிக்கப்படக்கூடாதே என்று ‘புற ஊதா கதிர்களை’ வடிகட்டுவதற்கான ‘ஓசோன்’ போர்வை. உயிர்கள் உறங்கவும், ஓவ்வெடுக்கவும், இரவு – பகல் என்று போர்வையாய் மாறி மாறி வரும் காலம்!
பருவம் தவறாமல் பெய்யும் மழை!
உயிரினங்கள் வாழ்வதற்கான காற்று!
உணவுக்காக செழிக்கும் பூமி!
“நாங்கள் வீணாகப் படைக்கப்படவில்லை! ஒரு லட்சியத்துடனேயே படைக்கப்பட்டிருக்கிறோம்!’ – என்று சொல்லாமல் சொல்லும் உலகம்!
‘பிரபஞ்ச நியதியாகிய’ இந்த இயக்கமே ‘இஸ்லாம்’ எனப்படுவது அதாவது படைத்தவனுக்கு ‘அடிபணிதல்’; அந்த அடிபணிதலில் உருவாகும் ‘அமைதி’ என்பதே இஸ்லாத்தின் பொருள்.


உலகம் என்னும் கூட்டுக் குடும்பத்தின் அங்கமே மனிதனும். பௌதீக ரீதியில் உடலியல் இயக்கம் பிற படைப்புகளோடு படைத்தவனுக்கு அடிபணிந்து ஒத்துப் போகிறது. இதன் விளைவாகவே மனித உடலில் அமைதி என்னும் ஆரோக்கியம் நிலவுகிறது. செவிகள் படைத்தவனுக்கு அடிபணிவதால்தான் ‘புலணுர்வு’ அதாவது ‘கேட்டல்’ என்னும் செயல் ரீதியான அமைதி காணப்படுகிறது.
சீரான முறையில் இதயம் துடிப்பதால்தான்.. உடல் முழுவதும் இரத்தம் பாய்கிறது. மனிதன் உயிர் வாழ முடிகிறது.
இப்படி பார்த்தல், சுவைத்தல், நடத்தல் என்று மனித உடல் இயக்கங்கள்கூட எல்லா மனிதருக்கும் பொதுவாகி அடிபணிதலை வெளிப்படுத்தி அமைதி காக்கின்றன.
மனித படைப்பின் நோக்கம் படைத்தவனுக்கு அடிபணிதல். அப்படி முழுமையாக அடிபணிந்து வாழும் அடிமைகளே ‘முஸ்லிம்கள்’. அதற்கான வழிகாட்டுதலே ‘வேதங்கள்’. அவற்றில் கடைசியாக வந்த இறைமறையே திருக்குர்ஆன். வேதங்களை போதிக்க வந்தவர்களே தூதர்கள். தூதர்களின் வரிசையில் இறுதியாக வந்தவர்களே நபிகளார். 

இறைவனின் கட்டளைகள்படி வாழ அல்லது மறுக்க ஓரளவு சுய அதிகாரம் கொடுக்கப்பட்டு படைக்கப்பட்டவனே மனிதன். இந்த அடிபணிதலுக்கான தேர்வுகூடமே ‘இம்மை’ எனப்படும் உலகம். இதன் இறுதி முடிவுகள் தெரியும் இடமே ‘மறுமை’ எனப்படும் மறு உலகம்.
இந்த விசாலமான பொருளைப் புரிந்து கொண்டால்தான் ஒவ்வொருவரும் தத்தமது கடமைகளையும், பொறுப்புகளையும் சரிவர நிறைவேற்ற முடியும். மனித இனத்தில் அமைதியை ஏற்படுத்த முடியும்.
“இறைநம்பிக்கைக் கொண்டவர்களே! மனிதர்களும், கற்களும் எரிபொருளாகக் கொண்ட அந்த நரக நெருப்பிலிருந்து உங்களையும், உங்கள் மனைவி – மக்களையும் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் மீது கடும் சீற்றமுடைய வானவர்கள் நியமிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் இறைவனின் கட்டளைக்கு ஒருபோதும் மாறு செய்வதில்லை. அவர்களுக்கு எந்தக் கட்டளை இடப்பட்டாலும் அதனை அவர்கள் நிறைவேற்றுகிறார்கள்” (66:6) – என்கிறது திருக்குர்ஆன்.
இறைவனின் தண்டனையிலிருந்து தன்னை மட்டும் பாதுகாத்துக் கொள்வதோடு ஒரு மனிதனின் பொறுப்பு முடிவடைந்துவிடுவதில்லை. மாறாக, இயற்கையாகவே எந்தக் குடும்பத்தின் தலைமைப் பொறுப்பு அவன் மீது படர்ந்திருக்கிறதோ, அந்தக் குடும்பத்தைச் சார்ந்த ஒவ்வொருவரும் அவனால் இயன்றவரை இறைவனுக்கு விருப்பமான மனிதர்களாய் அவர்கள் விளங்குவதற்கு தேவையான கல்வியும், ஒழுக்கப் பயிற்சியும் அளித்திட வேண்டும். அவர்கள் நரக பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்றால் தன்னால் இயன்ற அளவுக்கு அதிலிருந்து தடுத்திட முயற்சிக்க வேண்டும்.
“உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரும், பாதுகாவலரும் ஆவார். உங்களில் ஒவ்வொருவரும் அவரது கண்காணிப்பு… பொறுப்பின் கீழ் உள்ளவர்களைப் பற்றி கேட்கப்படுவார். ஆட்சியாளரும் பொறுப்பாளரே. அவரிடம் அவருடைய குடிமக்களைப் பற்றி வினவப்படும். கணவன் தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். பெண் தன் கணவனின் வீடு, அவனுடைய குழந்தைகளுக்குப் பொறுப்பாளியாவாள். பணியாள் தன் எஜமானனின் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே! உங்களில் ஒவ்வொருவரிடமும் அவர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டவர்களைப் பற்றிக் கேட்கப்படும்” (புகாரி, 
முஸ்லிம்)

குழந்தை வளர்ப்பு என்பது மிக முக்கியப் பொறுப்பாகும். ஆட்டு மந்தையின் ‘இடையனைப்’ போன்ற பொறுப்பு இது. ஓநாயிடம் ஆடுகள் சிக்கிக் கொல்லப்படாமல் காக்கும் பொறுப்பு இடையனைச் சேர்ந்தது. அதேபோலதான், பெற்றோர்களும் தங்கள் பிள்ளைகளை ஓநாய்கள் என்னும் ‘சமூகத் தீமைகளில்’ சிக்கி வாழ்க்கையைத் தொலைத்துவிடாமல் காக்கும் பொறுப்புக் கொண்டவர்கள். அதிலும் குறிப்பாக இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறியை தங்கள் வாழ்க்கையாக தேர்வு செய்துகொண்ட முஸ்லிம்களுக்கு இந்தப் பொறுப்பு மற்றவர்களைக் காட்டிலும் அதிகமாக உள்ளது. 

நாளைய சமூகத்தின் சிற்பிகளான இளைய சந்ததியை திருக்குர்ஆன் மற்றும் திருநபியின் வழிமுறைகளின்படி வார்த்தெடுக்க வேண்டிய மிக முக்கியப் பொறுப்புக் கொண்டவர்கள் இவர்கள். துரதிஷ்டவசமாக இன்றைய இளந்தலைமுறையினர் தங்கள் குணாம்ச அடையாளங்களை இழந்து நிற்கிறார்கள்.மனித இனத்தின் பேரழிவுக்கு காரணமாக விளங்கிக் கொண்டிருக்கும் மேற்கத்திய கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுக்க வேண்டியது மிக முக்கியமானது. அத்துடன் அன்பும், அறநெறிகளும், மனித நேயமும், சகோதரத்துவமும், சகிப்புத்தன்மையும் ஒருங்கே கொண்ட இஸ்லாமியக் கொள்கையின்படி வாழக் கற்றுக் கொடுக்க வேண்டியது இன்னும் முக்கியம். ஒவ்வொரு குடும்பத்தாரும் தங்கள் குழந்தைகள் உயரிய ஒழுக்க விழுமியங்கள் கொண்ட மனித குல செம்மல்களாக இஸ்லாமிய அச்சில் வாத்தெடுக்கப் பாடுபட வேண்டும்.

- தொடரும்.

Related

குழந்தை வளர்ப்பு 8809054660985813381

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress