குழந்தை வளர்ப்பு:04, 'தளிர்களின் அருமைத் தோழர்'எங்கள் ஜமாஅத் பள்ளிவாசலுக்காக செங்கல்லும், மணலும் காம்பவுண்டுக்குள் இறக்கியிருந்தார்கள். தொழ வந்த சிறார்கள் மணல் மீது ஓடியாடி விளையாட ஆரம்பித்தார்கள். அங்கே வந்த நாட்டாண்மை அந்தக் குழந்தைகளைக் கண்டிக்க பயன்படுத்திய வார்த்தைகள் இவை: “ஷைத்தான்களா..! இறங்குங்குடா… மண்ணிலிருந்து..!”
இறைவனின் திருத்தூதர் குழந்தைகளிடம் இப்படியா நடந்து கொண்டார்கள்? இந்த எதிர்மறையான அறிவுரைகள் குழந்தைகளைச் சீர்த்திருத்தித்தான் செய்யுமா? கொஞ்சம் வரலாற்றின் கதவுகளைத் திறந்து பார்ப்போமா?”
இறைவனின் திருத்தூதர் நபிகளார் அவர்கள், அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளின் அதிபர்களைவிட உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்கள். பெரிய மனிதர்களின் வாழ்க்கை எப்போதும் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் இருக்கும் இல்லையா..?
சாதாரணமான மனிதர்கள் நாட்டின் அதிபர்களாக இருக்கலாம். ஆனால், அன்பு நபிகளாருக்கு இறைவன் அதைவிட முக்கியமான பொறுப்பு ஒன்றை அளித்திருந்தான். அதுவே, ‘ இறைத்தூதர்’ எனப்படும் பொறுப்பு.
மனிதர்களுக்கு இறைவனின் கட்டளைகளைப் போதிக்க வேண்டும்.
மனிதர்கள் இறைவனின் கட்டளைகளைப் பின்பற்றி வாழ்கிறார்களா? இல்லையா? என்று கண்காணிக்க வேண்டும்.
இதற்காக நபிகளார் அதிகம்.. அதிகமாக நேரம் ஒதுக்க வேண்டியிருந்தது. மக்களை நல்லவர்களாக்க.. அதிகம்… அதிகமாக நேரத்தைச் செலவழிக்க வேண்டியிருந்தது. மக்களிடையே ஏற்படும் பிரச்னைகளுக்கும் தீர்ப்பு வழங்க வேண்டிய கட்டாயமும் இருந்தது.
நபிகளாரிடம் குடும்ப பிரச்னைகளை முறையிட்டுச் சிலர் வருவார்கள். இன்னும் சிலரோ இஸ்லாமியச் சட்டங்களில் சந்தேகம் கேட்டு வருவார்கள். சிலர் ஏதாவது உதவி செய்யும்படி கேட்டு வருவார்கள். ஆக அன்பு நபியைச் சுற்றி எப்போதும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே இருக்கும்.

இவ்வளவு வேலைகளுக்கு இடையேயும்.. குழந்தைகளுக்காக நேரம் ஒதுக்க நபிகளார் தயங்கியதே இல்லை. குழந்தைகள் என்றால் நபிகளாருக்குக் கொள்ளைப் பிரியம். அவர்களுக்கு ஏராளமான குழந்தைத் தோழர்கள் இருந்தார்கள்.
அருமை நபி குழந்தைகளுக்கு நிறைய கதைகள் சொல்வார்கள். அதுவும் நல்ல.. நல்லக் கதைகள். குழந்தைகளுக்குப் புரியும் விதமாகக் குழந்தைகள் மொழியிலேயே கதை சொல்வார்கள்.
அன்பு நபி எப்போதும் குழந்தைகளுக்கு ஆதரவாகத்தான் இருப்பார்கள். அவர்கள் மீது அன்பு மழையைப் பொழிவார்கள். நிறையப் பரிசுப் பொருட்களைத் தருவார்கள். நபிகளாரின் குட்டித் தோழர்களில் ஒருவர் ஜாபிர். இவரது அப்பாவின் பெயர் ‘சம்ரா’. அதனால், இவர் ‘ஜாபிர் பின் சம்ரா’ அதாவது ‘சம்ராவின் மகன் ஜாபிர்’ என்று அழைக்கப்பட்டார்.
ஒருநாள்.
ஜாபிர் பள்ளிவாசலுக்குச் சென்றார். அங்குதான் அன்பு நபியும் வழக்கமாகத் தொழவருவார்கள்.
நபிகளாருடன் ஜாபிரும் சேர்ந்து தொழுதார்.
நபிகளாரும் ஜாபிரைப் பார்த்தார்கள்.
தொழுகை முடிந்தது.
அன்பு நபி வீட்டுக்குப் புறப்பட்டார்கள்.
ஜாபிரையும் தம்முடன் அழைத்துக் கொண்டார்கள். வழி எல்லாம் பேசிக் கொண்டே சென்றார்கள்.
இவர்கள் இருவரும் தெருவில் நடந்து செல்வதை மற்ற சிறுவர்களும் பார்த்தார்கள். ஒருவர் பின் ஒருவராக ஜாபிருடன் சேர்ந்து கொண்டார்கள். இப்படி பெரும் மழலைகள் பட்டாளம் சேர்ந்துவிட்டது.
குழந்தைகள் நபிகளாருடன் சேர்ந்து நடக்காமல் சற்றுத் தள்ளியே வந்தார்கள்.
இதை அன்பு நபிகளார் கவனித்தார்கள். குழந்தைகள் தமக்குச் சமமாக வரும்வரை கொஞ்ச நேரம் நின்றார்கள். குழந்தைகள் தம்முடன் நடந்து வரட்டுமே என்றுதான் நபிகளார் அப்படிச் செய்தார்கள்.
இதைப் புரிந்து கொண்ட குழந்தைகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சியை நபிகளார் இன்னும் அதிகமாக்கினார்கள்.
நபிகளார் குழந்தைகளோடு குழந்தையாக கும்பலில் நடந்தார்கள். குழந்தைகளிடம் சிரித்து.. சிரித்துப் பேசினார்கள். அக்கறையோடு அவர்களை விசாரித்தார்கள். எல்லோருக்கும் முத்தம் கொடுத்தார்கள். தலையில் கையை வைத்து அன்போடு வருடி விட்டார்கள். அவர்களுக்காக பிரார்த்தனைப் புரிந்தார்கள்.
ஜாபிருக்கும் ஒரு முத்தம் கிடைத்தது. அவருக்குத் தாங்க முடியாத மகிழ்ச்சி!
அருமை நபிகளார் குழந்தைகளிடம் அளவில்லாத அன்புக் காட்டினார்கள். அவர்களை அதிகதிகமாக நேசித்தார்கள். இது ஓர் அற்புதமான குணமில்லையா! இடைவிடாத பணிச்சுமைகளுக்கு நடுவில்.. ஒரு மிக பெரிய மனிதர் குழந்தைகளுக்கு நேரம் ஒதுக்கினார் என்பது அதிசயம்தானே!
  • இறைவனின் தூதராக..
  • முஸ்லிம்களின் தலைவராக..
  • இஸ்லாமிய ஆட்சியின் அதிபராக..
  • மக்களுக்கு இறைவனின் கட்டளைகளைப் போதிக்கும் ஆசிரியராக..
  • தொழுகைக்குத் தலைமைத் தாங்கும் இமாமாக..
  • இறைவனின் கட்டளைகளுக்கு அடிபணிந்த நல்ல அடியாராக..
நபிகளார் பல்வேறு பொறுப்புகளைக் கவனித்து வந்தார்கள்.
அத்தோடு, வெளிநாடுகளிலிருந்து எல்லாம் நபிகளாரைப் பார்க்க பல நாடுகளின் அரசர்கள் வருவார்கள். வெளிநாட்டுத் தூதர்கள் வருவார்கள். அவர்களுக்காகப் பல மணி நேரம் செலவழிக்க வேண்டும். அந்தச் சந்திப்புகளுக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

அத்துடன் முடிந்ததா என்றால் அதுதான் இல்லை.
இஸ்லாமிய அரசை ஒழிக்க எதிரிகள் படை திரட்டி வருவார்கள். அவர்களைப் போர்முனைக்குச் சென்று விரட்டி அடிக்க வேண்டும். இப்படிப்பட்ட போர்களில் நபிகளார் தளபதியாய் இருந்து போரிட வேண்டும். போரிடும்போது, போரில் முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டிய சட்ட திட்டங்கள், விதிமுறைகள், மனித உரிமைகள் குறித்தும் நபிகளார் முஸ்லிம்களுக்கு போதிக்க வேண்டிய பணியும் இருந்தது. இப்படி ஏகப்பட்ட பணிகள்!
இந்த ஓயாத பணிகளுக்கு இடையிலும், அருமை நபி குழந்தைகளைச் சந்தித்தார்கள். அந்தச் சந்திப்பை ஒரு பழக்கமாகவே ஆக்கிக் கொண்டார்கள். குழந்தைகளைப் பார்ப்பது, அவர்களுக்கு ‘சலாம்-வாழ்த்து’ சொல்வது, அவர்களுக்காகப் பிரார்த்திப்பது என்று அன்பு நபி குழந்தைகளின் அருமைத் தோழராக விளங்கினார்கள்.
அன்பு நபி வெளி ஊர்களுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போதுகூட வழியில் குழந்தைகளைச் சந்திப்பார்கள். கொஞ்ச நேரம் அவர்களுடன் தங்கிருப்பார்கள். அவர்களிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவார்கள். குழந்தைகளை ஒட்டகத்தின் மீது ஏற்றிக் கொள்வார்கள். ஒரு சுற்றுச் சுற்றிக் காட்டுவார்கள். இந்த ஒட்டக சவாரிக்கு… போட்டி போட்டுக் கொண்டு குழந்தைகள் காத்து நிற்பார்கள். ஒட்டகத்தில் நபிகளாருக்கு முன்னும் – பின்னுமாய் குழந்தைகள் ஏறிக் கொள்வார்கள். உற்சாக மிகுதியால்.. “ஓ..!ஓ…!” எனக் கூச்சல் போடுவார்கள்.
உண்மையில் இந்தக் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். 

- தொடரும்


Related

குழந்தை வளர்ப்பு 3718446227155923924

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress