சாந்திவனத்து கதைகள்: 'இரண்டு வகையான எழுத்துக்கள்'

விளையாடிக் கொண்டே சாந்திவனத்தைவிட்டு வெளியேறிய சிங்கக் குட்டியும், சிறுத்தைக் குட்டியும் மணற்பாங்கான அந்த பிரதேசத்துக்கு வந்து விட்டன.
“நான் சொன்னால்.. கேட்டாதானே? காட்டைவிட்டு எங்கேயும் போகக் கூடாது என்று அம்மா ஏற்கனவே எச்சரித்திருக்கிறார்கள். உன்னால்தான் எல்லாம்! நாம் காட்டைவிட்டு வெகு தூரம் வந்துவிட்டோம்!” – சிறுத்தைக் குட்டி சிங்கக் குட்டியைப் பார்த்து கோபமாக சொன்னது.
பதிலுக்கு சிங்கக் குட்டியும் கத்த.. வாக்குவாதம் முற்றியது.
கடைசியில், கோபத்தில் சிறுத்தைக் குட்டி… சிங்கக் குட்டியின் முகத்தில் ஓங்கி ஓர் அறைவிட்டது.
எதிர்பாராத அந்த சம்பவத்தால் நிலைக் குலைந்து போன சிங்கக் குட்டியின் கண்கள் கலங்கிவிட்டன. தாள முடியாத வலி வேறு.
பொறுத்துக் கொண்ட சிங்கக் குட்டி, “இன்று எனது உயிர் நண்பன் என்னை ஒரு காரணமும் இன்றி முகத்தில் அறைந்துவிட்டான்!” – என்று மணலில் எழுதியது.

மௌனமாக காட்டை நோக்கி இரண்டும் நடந்தன.
வழியில் ஒரு குளத்தைக் கண்டன. சற்று களைப்பாறலாம் என்று முடிவெடுத்தன.
குளத்தில் இறங்கி குளிக்கவும் ஆரம்பித்தன.
‘பெரியோர் துணையின்றி எந்தக் குளத்திலும் இறங்கக் கூடாது!’ - என்று அம்மா சொன்னதையும் மறந்துவிட்டன.
விளைவு?
குளத்தில் ஒரு முதலை இருந்தது.
சிங்கக் குட்டியும், சிறுத்தைக் குட்டியும் குளிப்பதைக் முதலைக் கண்டது.
‘சர்ரென்று’ நீரை கிழித்தவாறு ஒரே பாய்ச்சலாக பாய்ந்து சிங்கக் குட்டியின் காலை கவ்வியது.
சிறுத்தைக் குட்டிக்கு அந்த வீரம் எப்படிதான் வந்ததோ தெரியவில்லை!
ஓங்கி முதலையின் தலையில் ஓர் அடி விட கிறு கிறுத்துப் போன முதலை. தனது பிடியை தளரவும் விட்டது.
‘குளியலும் வேண்டாம்..! ஒன்றும் வேண்டாம்!! தப்பித்தால் போதும்!’ - என்று சிங்கக் குட்டியும், சிறுத்தைக் குட்டியும் ஒரே பாய்ச்சலாக பாய்ந்து கரையை அடைந்தன.
‘இனி வேண்டாம் ஆபத்து!’- என்று காட்டை நோக்கி நடந்தன.
வழியில் ஒரு மலைப் பகுதி எதிர்பட்டது.

ஒரு பெரும் பாறையில் சிங்கக் குட்டி இப்படி எழுதியது: “ இன்று என் உயிர் நண்பன் முதலையிடமிருந்து என்னைக் காப்பாற்றினான்!”
சிறுத்தைக் குட்டி ஆச்சரியமடைந்து கேட்டது:
“நான் உன்னை அறைந்தபோது, மணலில் எழுதிய நீ, தற்போது பாறையில் எழுதினாயே ஏன்?”
சிங்கக் குட்டி புன்னகைப் பூத்தது. “நண்பா! நமக்கு யாராவது தீங்கு செய்தால்.. மணற்பரப்பில் எழுதிய எழுத்துக்களைக் காற்று அழித்து விடுவது போல நாம் அவற்றை உடன் மறந்துவிட வேண்டும்.
ஆனால், பிறர் நமக்குச் செய்யும் நன்மைகளை பாறையில் எழுதப்பட்ட எழுத்துக்களாய் மறக்காமல் நினைவில் வைத்திருக்க வேண்டும்! இவை என் பெற்றோர் சொல்லிக் கொடுத்த பாடம்!” – என்றது மெதுவாக.
“ஓ..! அற்புதம்..!!” – என்ற சிறுத்தைக் குட்டி சிங்கக் குட்டியை அணைத்துக் கொண்டது.
சிரித்துப் பேசியவாறே இரண்டும் சாந்திவனத்தை நோக்கி நடந்தன.Related

சாந்திவனத்து கதைகள் 1833352681281477896

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress