குழந்தை வளர்ப்பு - 17:'தீமைக்கொரு தீமை…. இலவசம்!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/11/16.html
“சொத்துக்காக சொந்தத்
தந்தையைக் கொலை செய்யும் தனயன்’, ‘வறுமைக்கு அஞ்சி பெற்ற குழந்தைகளை விற்கும் பெற்றோர்’
– இத்தகைய செய்திகள் பத்திரிகை டி.வி. போன்ற ஊடகங்களில் சர்வ சாதாரணமாக இடம் பெறத்
தொடங்கிவிட்டன.
இன்றைய பிள்ளைகள்,
உலகக் கல்வியில் டாக்டர்கள், எஞ்சினீயர்கள், வக்கீல்கள் என வானளாவ உயர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், பெற்றோர் விஷயத்தில் அலட்சியமாக இருப்பதே முதியோர் இல்லங்கள் பெருகுவதற்குக்
காரணம். மேற்குலகைத் தாண்டி முதியோரைப் புறக்கணிக்கும் இந்தக் கலாச்சாரம் தற்போது நம்
நாட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. இதற்கு சாட்சியம்தான் அதிகரித்துவரும் முதியோர்
இல்லங்கள். ஒரு காலத்தில் மேலை நாட்டில்தான் இத்தகைய இல்லங்கள் இருந்தன. தற்போது நம்
அமைப்பிலும் தழைத்து வளர ஆரம்பித்துள்ளன.
நவீன அறிவியலில்
பல சாதனைகளைப் படைத்து வருகிறோம் நாம். ஆனால், நம் இதயங்களில் முதுமையை ஒரு பாரமாகக்
கருதுகிறோம். இந்த மனநிலை சாதி, சமயங்களைக் கடந்து இன்று எல்லா சமூகத்தாரிடமும் அதிகரித்து
வருவதே உண்மை. சிறுவயதிலிருந்தே பிள்ளைகளை டாக்டர்களாகவும், எஞ்சினீயர்களாகவும் மாற்றுவதில்
காட்டும் சிரத்தையை நல்ல மனிதர்களாக உருவாக்குவதில் காட்டுவதில்லை. இதன் விளைவுகள்
பின்னாளில் எதிர்படும்போது, பெற்றோர் நிலைகுலைந்து போகின்றனர்.
கொல்கொத்தா பல்கலைக்கழகத்தில்
‘ரீடராகப்’ பணிபுரிபவர் ராஜகோபால் தார் சக்கரவர்த்தி. இவர் எழுதியுள்ள ஆய்வு நூல்,
‘குரோயிங் ஆஃப் இந்தியா பாப்புலேஷன் ஏஜிங் இன் தி கான்டெக்ஸ்ட் ஆஃப் ஏசியா’ – முதுமையை
நோக்கி இந்தியா – ஆசிய மக்கள் தொகையில் பெருகிவரும் முதியவர்கள்’ - என்பதாகும்.
உலகில் நூறு ஆண்டுகளுக்கு
மேல் வாழ்பவர்களின் எண்ணிக்கை இப்போது 3 ஆயிரம் பேர் மட்டுமே!
2050 ஆம் ஆண்டில்
இது ஒரு லட்சத்து 11 ஆயிரமாக இருக்கும்.
இதனால். மக்கள்
தொகையில் இளைஞர்களின் விழுக்காடு உலகளவில் குறைந்துவிடும்.
இன்னும் 50 ஆண்டுகளில்
வயதானவர்களின் எண்ணிக்கை 3 மடங்காகிவிடும்.
பிறப்பு – இறப்பு
விகிதம் குறைந்துவிட்டதால் இந்திய மக்கள் தொகையில் 60 வயதுக்கு மேல் வாழ்பவர்களின்
எண்ணிக்கை அதிகரித்துவிட்டது.
உலகில் சீனாவுக்கு
அடுத்தபடியாக முதியவர்களின் எண்ணிக்கை இந்தியாவில்தான் அதிகமாக இருக்கும்.
இச்சூழலில், பிள்ளைகளுக்கு
ஒழுக்க விழுமியங்களின் அடிப்படையில் சமூகப் பொறுப்பூட்ட அதிகளவு கவனம் செலுத்த வேண்டும்.
இல்லையென்றால், உலகாயத சிந்தனைக் கடலில் அவர்களைத் தள்ளி அதிலேயே கரைத்து விட்டதாகிவிடும்.
இதனால், பிள்ளைகள் மிகச் சிறந்த மதிப்பெண்கள் பெறுபவர்களாக மாறலாம்; புகழின் உச்சிக்குச்
செல்லலாம். ஆனால், எக்காலத்துக்கும் மனிதநேயம் மிக்கவர்களாக, உயரிய விழுமியங்களை சமூக
வாழ்வில் வெளிப்படுத்துபவர்களாக அவர்கள் மலராமல் போய்விடும் ஆபத்து உண்டு. அவைதான்
நடப்புச் செய்திகள் பதிந்துவரும் அதிர்வலைகள்.
இஸ்லாமியக் கண்ணோட்டத்தில்,
'பிள்ளைகள் மீது பெற்றோர்களின் பொறுப்புகள் என்ன?' - என்பதையும், 'பெற்றோர்கள் மீது பிள்ளைகளின்
கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ன என்பதையும் எடுத்துரைக்க
வேண்டும்.
இந்த உலக வாழ்க்கை
நிலையற்றது. அதுபோலவே, இளமையும் விரைந்துவிடும். என்பதைப் பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்குப்
போதிக்க வேண்டும். இந்தப் பூவுலகைத் தன் கைக்குள் அடக்கத் துடிக்கும் இளமையைச் சீரிய
முறையில் பயன்படுத்தும் வழிகாட்டலும் அவசியம்.
- தொடரும்