குழந்தை வளர்ப்பு - 16: 'அடையாளப்படுத்துங்கள்.. அமைதி விரும்பி என..'‘இராசாயன ஆயுதங்கள்’ என்ற பூச்சாண்டி காட்டி ‘ஆயில்’ கனவுகளுடன் அமெரிக்கா, இராக்கில் காலடி வைத்தது. தற்போது, ‘ஆப்பில்’ சிக்கிக் கொண்ட குரங்காகிவிட்டது. அமெரிக்கா இராக்கை ஆக்திரமிக்கத் திட்டமிட்ட தொடக்கக் காலத்தில் ‘ஸ்கை’ டி.வி. உலக சிறார்களிடையே சிறுவர்களை வைத்தே ஒரு பேட்டி எடுத்தது. கேள்விகளைக் கேட்டதும் சிறுவர்கள்தாம்! பதில் சொன்னதும் சிறுவர்கள்தான்! அமெரிக்காவின் அடாவடிப் போர் சம்பந்தமான பேட்டி அது. ‘ஸ்கை’ இணையத் தளத்திலும் அது  வெளியிடப்பட்டது.

அமெரிக்காவின் நியூயார்க், ஜப்பானின் டோக்கியோ, பிரிட்டனின் லண்டன், அயர்லாந்தின் பெல்ஃபாஸ்ட் போன்ற முக்கிய நகரங்கள் இதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டன. ‘இராக் மீது அமெரிக்காவின் போர், வெற்றி இவற்றின் சாத்தியக் கூறுகள், போரின் அச்சுறுத்தல் எப்படி பாதித்துள்ளது?’ – என்பன குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன. எல்லா சிறுவர்களும் போருக்கு எதிராகவே இருந்தனர். 

ஆனால், டோக்கியோவின் சிறுவர்களுக்கு தங்கள் நாடான ஜப்பான், இராக் போரில் ஈடுபடவிருப்பது அப்போது தெரியவில்லை. அத்தோடு அமெரிக்காவின் போர் பங்களிப்பு விபரீதத்தையும் அவர்கள் அறியவில்லை.

அமெரிக்க சிறுவர்களில் ஒருவர் மைக்கா மெய்டா (18), "இந்தப் போர் என்னை மிகவும் கலங்க வைக்கிறது. இதன் மூலம் எதை  வென்றாலும் அதில் ஒரு பொருளும் இருக்காது!” – என்றார்.

ரேய்னா மிசாகியோ (15), “இந்தப் போர் யோசனையே என்னை மிகவும் கோபத்தில் தள்ளுகிறது. யு.எஸ் வலிமையான தேசம் என்பது உண்மைதான்! ஆனால், மிகவும் தன்னடகத்துடனேயே இருப்பது அதைவிட முக்கியம்!” – என்றார் படபடப்புடன்.

“இந்தப் பிரச்னைக்கு போர்தான் தீர்வு என்பதை என்னால் ஏற்க முடியாது. இதற்குப் பல வழிகள் உள்ளன. போர்தான் தீர்வு என்று நினைப்பதால் நான் மிகவும் வருந்துகிறேன்!” – என்கிறார் வருத்தத்துடன் ரீயாகோ தகாஹாஸ்ஹி (15). 

ஸவோஸிங் யாங்கின் (15) கருத்து இது: “குறிப்பாக அதிகாரிகளை நினைத்தால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது. இப்போரினால் பாதிக்கப்படுவது நாம்தான். எப்போதெல்லாம் போரைத் தடுத்து நிறுத்த முடியுமோ அப்போதெல்லாம் போரைத் தடுத்தே தீர வேண்டும்!”

“போரினால் பாதிக்கப்படப்போவது அப்பாவி மக்கள்தாம்!” – என்று சொன்ன நிக்கோ ரோஜர் (11), போருக்குக் காரணமான புஷ்ஷீக்கு கொஞ்சமும் ஆதரவு தரத் தயாராக இல்லை.

பிரிட்டனில் சில சிறுவர்கள் போர் நடவடிக்கையை ஆதரித்துப் பேசினாலும் அவர்கள் எண்ணிக்கையில் சிறுபான்மையினர்தான்!

“இராக் இரசாயன ஆயுதங்களை வைத்திருந்தால் அதற்கான நடவடிக்கையை எடுத்தே தீர வேண்டும்!” – என்றார் டெஸ் ராபாட் (16). ஆனால், அவருடைய தோழி லூசி டோபின் (16) “அங்கு ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும்வரை பொறுத்திருக்க வேண்டும். எந்தக் காரணமும் இல்லாமல் போர் செய்யவே கூடாது!” – என்கிறார் தொடர்ந்து அவர்.

சமீர் பாஸ்ஹா (13), “டோனி பிளேயரை ஒரு பிடி பிடிக்கிறார். “டோனி பிளேயர், அவருடைய அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார். ஏன் அமெரிக்காவும், பிரிட்டனும் அடுத்த நாட்டின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க வேண்டும்” – என்கிறார் கோபமாக.

“பிரிட்டனின் எந்தச் செயல் திட்டத்தையும் நான் ஆதரிக்க மாட்டேன். ஆப்கானிஸ்தானில் போர் தொடுத்ததும், இராக்கில் போர் தொடுக்க செல்வதும் சரியேயில்லை. நான் ஒருகாலும் புஷ்ஷைப் பின்பற்ற மாட்டேன். உண்மைகளை அறியும்வரை என் வீரர்களைப் போரில் ஈடுபடுத்தவும் மாட்டேன்!” – என்கிறார் தாமஸ் கில் பாட்ரிக்.

வெகுளித்தனமான மக்களா? அல்லது வாழ்க்கை எந்திரமயத்தில் புறச்சூழல்கள் புலன்களுக்குத் திரையிடப்பட்டுவிட்டனவா? இந்த வினாக்கள்தான் எழுகின்றன ஜப்பான் சிறுவரிடையே இராக் போர் குறித்த அறியாமையை அறியும்போது!

“என்னுடைய நண்பர்களில் யாரும் (இராக்) போரைப் பற்றிப் பேசி நான் கேட்டதேயில்லை. ஜப்பான் ஓர் அமைதியான நாடு. இந்தப் பிரச்னைகளை நாங்கள் ஒரு மூன்றாம் மனிதர்களாகவே பார்க்கிறோம்!” – என்கிறார் பதினொரு வயதான மைக்கா. 

எந்தப் போரானாலும் பாதிக்கப்படுவது குழந்தைகளும், பெண்களும்தான்!


ஆனாலும், இராக்கில் திட்டமிட்டே அமெரிக்கா சர்வதேசத் தடை உத்திரவு மேலாண்மையில் லட்சக்கணக்கான குழந்தைகளைக் கொன்றது. ஒரு கட்டத்தில் அதியாவசிய உயிர் காக்கும் பொருள்களுக்கும் தடை விதித்தது. குழந்தைகளையும், ஆண்களையும் கொன்றுவிட்டு, பெண்களை அடிமைகளாக்கி வைத்த மோசஸ் (மூஸா நபி) காலத்து ‘பாரோ’ (பிர்அவன்) மன்னனின் நிகழ்கால அவதாரம்தான் புஷ்.

குழந்தைகளை சிறுவயதிலேயே அமைதி விரும்பிகளாக சமாதானத் தூதர்களாக வளர்க்க ஒரே வழி இஸ்லாமிய நெறிமுறையிலான வாழ்வியல் திட்டத்தினால்தான் இது சாத்தியமாகும்.

எங்கெல்லாம் மூர்க்கத்தனமும், முரட்டுத்தனமும் முஸ்லிம் ஆட்சியாளர்களிடையே தலைவிரித்தாடியதோ, எந்தக் கொடுங்கோலர்களின் கொடுங்கோன்மைக்கு அப்பாவி மக்கள் பலியானார்களோ, அந்த ஆட்சியாளர்களின் மண்டையில் கோலோச்சிய ‘சிந்தனை’ இஸ்லாம் அல்லாத பிற சித்தாந்தங்கள்தான்! அந்த ஆட்சியாளர்களின் பெயர்களும், நடை – உடை, பாவனைகளும், வெளித்தோற்றங்களும், வணக்க முறைகளும் முஸ்லிம்களைப் போலவே இருந்தாலும் சரியே!


அந்த ஆட்சியாளர்கள் நேற்றைய சதாம் ஹீசைன்களாக இருந்தாலும் அல்லது அதற்கு முன்னால் உலகின் இன்னொரு பகுதியை ஆண்ட நாசராக (எகிப்திய அதிபர்) இருந்தாலும் சரியே! அல்லது முஸ்லிம் ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொண்டு இஸ்லாமிய ஜனநாயக அமைப்புக்கு எதிராகச்  செயல்படும் வேறு யாராக இருந்தாலும் சரியே! 

இந்தக் கொள்கை வேறுபாடுகளை சிறுவர்களுக்கு அடையாளப்படுத்தி, இறைவனுக்கும், இறைவனின் திருத்தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும் அடிபணிய செய்ய வேண்டும். வாழ்வின் அனைத்துத் துறைகளுக்குமான வழிகாட்டி, தலைவர் நபிகளார்தான் என்று உறுதியான பின்பற்றுதலுக்குப் பழக்கப்படுத்த வேண்டும் – அரசியல் துறை உட்பட – இதுவே இம்மை – மறுமை ஈருலகிலும் வெற்றியைத் தரும்.

“இறைவன் கூறுகின்றான்: “கூறுவீராக! அல்லாஹ்வின் வர்ணத்தை மேற்கொள்வீராக! அல்லாஹ்வின் வர்ணத்தைக் காட்டிலும் யாருடைய வர்ணம் சிறந்தது?” (திருக்குர்ஆன் 2:138)

- தொடரும்

Related

குழந்தை வளர்ப்பு 728063448219338035

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress