சிறுவர் கதை: 'வீணாக்கலாகாது பாப்பா!'

வாலுன்னா வாலு சரியான வாலு, அமுதன். 

அம்மாவை சதாய்ப்பது. அம்மா பேச்சை கேட்காமலிருப்பது. அம்மாவுக்கு கஷ்டம் தருவது என்று அமுதனின் ஒவ்வொரு நாள் பொழுதும் கழியும். 

அவர்களது கிராமத்தில் ஒரே ஒரு கிணறு இருந்தது. அதுவும் ஊருக்கு வெளியே இரண்டு மைல் தொலைவில்; வயல்காட்டில். 

ஊர்வாசிகள் குடி தண்ணீர் எடுக்க அங்குதான் போவார்கள். 

அமுதனின் அம்மாவும் அங்கிருந்துதான் குடி நீர் கொண்டு வருவார்.

இடுப்பில் ஒரு குடம். தலையில் இன்னொரு குடம். “அமுதா! நீயும் ஒரு சின்ன குடம் எடுத்து கொண்டு வாய்யா. அப்போதுதான் நாம் கொஞ்சம் தாராளமாய் நீரை பயன்படுத்தலாம்!” – என்று கூப்பிடுவாள். 


“போம்மா! உனக்கு வேற வேலையே இல்லை! நான் வரமாட்டேன் போ!” – என்று அவன் மறுத்துவிடுவான்.

அம்மா இருட்டோடு நீர் எடுக்கச் செல்வாள். வயல் வரப்புகளில் சிரமப்பட்டு நடப்பாள். கஷ்டத்துடன் நீர் மொண்டு வருவார். 

அம்மா படும் கஷ்டத்தை அமுதன் பார்க்கத்தான் செய்தான். பார்த்து என்ன செய்ய? ‘அம்மா பாவம்! சிரமப்பட்டு நீர் கொண்டு வருகிறாரே! நாமும் கொஞ்சம் உதவி செய்வோம். அவர் நமக்கும் சேர்த்து அல்லவா நீர் கொண்டு வருகிறார்!” – என்று நினைக்க வேண்டுமே!

உதவிதான் செய்ய வேண்டாம். சரி உபத்திரமாவது செய்யாமலிருக்கலாம் அல்லவா! ஆனால், அம்மா சிரமப்பட்டு கொண்டுவரும் குடிநீரை அவன் வீணாக்குவான். வேண்டுமென்றே இரண்டு முறை முகம் கழுவுவான். அடிக்கடி கை, கால்களை கழுவிக் கொண்டே இருப்பான். நீரில் சோப்பு கலப்பான். குடிக்க சொம்பு நிறைய நீர் மொண்டு கொஞ்சமாய் குடிப்பான். மிகுந்த நீரை கீழே கொட்டுவான். இப்படி குடிநீரை பலவகையில் விரயம் செய்வான். 


ஒருநாள். குடிநீர் முற்பகலிலேயே தீர்ந்துவிட்டது. குடிப்பதற்கு ஒரு சொட்டு நீர் கூட இல்லை. இதனால், அம்மாவுக்கு கோபம் வந்தது. அமுதனை திட்டினார். கோபத்தில் அடித்தும் விட்டார்.

அமுதனுக்கு ‘புர்’ என்று கோபம் தலைக்கேறியது. “இனி இந்த வீட்டில் எவன் இருப்பான்?” – என்று கூச்சல் போட்டான். பிறகு, அம்மாவிடம் கோபித்துக் கொண்டு வீட்டிலிருந்து வெளியேறிவிட்டான். 

கிராமத்திலிருந்து.. வயல்காடுகளையும் தாண்டி… மலையடிவாரம் போனான். கோபத்தில் அவன் எவ்வளவு தூரம் சென்றான் என்பது அவனுக்கே தெரியவில்லை.

மலையடிவாரம். 

அமுதன் ஒரு மரத்தடியில் அமர்ந்தான்.

மதியம் வெய்யில் கடுமையாய் கொளுத்தியது. 

பசி வயிற்றைக் கிள்ளியது. 'குடிக்க கொஞ்சம் நீர் இருந்தால் தேவலாம்!’ – என்று நினைத்துக் கொண்ட அமுதன் தண்ணீருக்காக சுற்றும் முற்றும் தேடினான்.


மலையடிவாரத்தில் எங்கு நீர் கிடைக்கும்? இதற்கு முன் அமுதன் அந்த இடத்திற்கு வந்ததேயில்லை! அதனால், நீர் எங்கே கிடைக்கும் என்பதும் அவனுக்குத் தெரியாது. 

நேரம் செல்ல செல்ல பசி எடுத்தது. தாகம் அதிகரித்தது.

அமுதன் நீரைத் தேடி அலைந்தான். தொலைவில் வெய்யிலால் கானல் நீர் வரி வரியாய் தெரியும். “ஆஹ்..! அதோ நீர் நிலை!” – என்று ஓடிப் பார்த்தால் அங்கே ஒன்றும் இருக்காது! வெறும் சமவெளியாய் இருக்கும். 

தாகத்தால் தவித்துப் போன அமுதனின் கோபம் போன இடம் தெரியவில்லை. ‘மலையடிவாரத்தில் இனியும் இருந்தால்… தாகத்தால் செத்துப் போக வேண்டியதுதான்!’ – என்று பயந்து போனவன் அங்கிருந்து விறு விறுவென்று கிராமத்தை நோக்கி நடந்தான்.


கடுமையான வெய்யில். தாகத்தால் தொண்டை வறண்டு போனது. நடை தளர்ந்தது. கண்கள் இருண்டன. “யாராவது ஒரே ஒரு டம்ளர் குடிநீர் தர மாட்டார்களா?" - என்ற நப்பாசை. நாக்கால் உதடுகளை அடிக்கடி ஈரமாக்கிக் கொண்டான். தள்ளாடி தள்ளாடி நடந்தான். 

“வீட்டில் எவ்வளவு குடிநீரை வீணாக்கி இருக்கிறோம். பாவம் அம்மா! நமக்காக எவ்வளவு சிரமப்பட்டு குடி நீரை கொண்டு வருகிறார்! நான் எவ்வளவு மடத்தனமாய் நடந்து கொண்டேன். “அம்மா.. அம்மா.. என்னை மன்னித்து விடு!” – அமுதனின் உள்ளம் புலம்பியது. அவனது கண்களில் கண்ணீர் திரண்டது. நீரின் மதிப்பு அவனுக்குப் புரிந்தது.

‘இனி குடிநீரை வீணாக்குவதில்லை!’ – என்று தீர்மானித்துக் கொண்டான். சிரமப்பட்டு கிராமத்தை அடைந்தான். 

அம்மா அமுதனை எதிர்பார்த்து வாசற்படியில் நின்றிருந்தார். முகம் கறுத்துப் போய் உடல் வியர்த்து வந்த மகனைக் கண்டதும் அவள் பதறிப் போனார். நிலைமையைப் புரிந்து கொண்டார். அவனை வாரி அணைத்துக் கொண்டார். கட்டிலில் அமர்த்தினார். பானையிலிருந்து ‘ஜில்’லென்று சொம்பு நிறைய நீரை மொண்டு வந்தார். அமுதனிடம் நீட்டினார். ‘மடக் மடக்’ கென்று அமுதன் நீரை குடிக்கலானான். கடைசி சொட்டு நீரையும் மிச்சம் வைக்காமல் அவன் ஆசையுடன் குடித்து முடித்தான். போன உயிர் திரும்பியதைப் போல் இருந்தது.

அம்மாவை அணைத்துக் கொண்ட அமுதன், “அம்மா! என்னை மன்னிச்சிடுங்க! இனி நான் குடிநீரை வீணாக்க மாட்டேன்! எனக்கு நீரின் அருமை புரிந்தது. நாளையிலிருந்து நானும் உங்ககூட நீர் எடுக்க வருகிறேன். என்னை மன்னிச்சிடுங்க!” – என்று விக்கி விக்கி அழுதான். 

அம்மா அமுதனின் தலையை அன்பாய் வருடி விட்டார். மகன் திருந்திவிட்டது அந்தத் தாய் மனசுக்குப் புரிந்துவிட்டது. அந்த சந்தோஷம் அவளுடைய விரல்களின் வருடலில் பிரதிபலித்தது.

இறகைவிட மென்மையான தாய்மையின் வருடல் அது.

Related

சிறுவர் கதை 4336340948224772336

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress