சாந்திவனத்து கதைகள்: 'அறிவாளி தோற்பதில்லை..!'
http://mazalaipiriyan.blogspot.com/2013/11/blog-post_3567.html
சாந்திவனத்து ராஜா சிங்கம் என்ன நினைத்ததோ தெரியவில்லை! அதற்கு அந்த ஆசை ஏன் வந்ததோ புரியவில்லை!
ஒருநாள் சிங்கம் மிருகங்களை தன் அரசவைக்கு வரும்படி அழைத்தது.
சிங்கம் வசித்து வந்ததோ ஒரு குகை. அங்கு போதிய காற்று வசதியும் இல்லை. வேட்டையாடிய விலங்குகளின் எலும்புகளால் குகை முழுக்க அழுகிய நாற்றம் அடித்தது.
ராஜாவின் அழைப்பை தட்ட முடியாதே! மிருகங்கள் எல்லாம் குகையில் கூடின.
கூட்டத்திலிருந்த கரடி நாற்றம் தாளாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டது. இதை சிங்கம் கவனித்தது. அதற்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
பிறகு? பிறகு என்ன? ஓங்கி ஓர் அறைவிட்டது. கரடி மயங்கி விழுந்தது.
"என் அரசவை நாற்றமெடுக்கிறதோ?" - சிங்கம் மிருகங்களைப் பார்த்து கர்ஜித்தது.
இதைக் கேட்டுப் பயந்துபோன குரங்கு, "இல்லை! இல்லை! மகாராஜா! தங்கள் அவையோ ரோஜாமலரின் வாசனையால் மணக்கிறதே!" - என்று மென்று விழுங்கியது.
"ரோஜாமலர் வாசனையா?" குரங்கு பொய் சொல்கிறது என்று சிங்கத்துக்குப் புரிந்தது. "கிண்டலா செய்கிறாய்?" - என்றவாறு விட்டது ஓர் அறை. "பளார்!" - குரங்கு கிறுகிறுவென்று சுற்றி மயங்கிவிழுந்தது.
இதைக் கண்டதும் மிருகங்களுக்கு உதறல் எடுத்தது. அங்கிருந்து ஒவ்வொன்றாய் நைசாக நழுவ ஆரம்பித்தன. அப்படி பயந்து குகையைவிட்டு வெளியேற ஆரம்பித்த மிருகங்களில் நரியும் ஒன்று.
நரி செல்வதை சிங்கம் கவனித்துவிட்டது. 'லப்பென்று' பாய்ந்து நரியின் வாலைப் பிடித்துக் கொண்டது.
"ஓய்..! நரியாரே! எங்கே நழுவுகிறீர்?" - என்றது கோபத்துடன்.
"இல்லை! ராஜா!..இல்லை... எட்டிப் பார்த்தேன்! அவ்வளவுதான்!" - என்று அது திருட்டு முழி முழித்தது.
"சரி.. உன் கருத்தென்ன? என் அரசவை உண்மையிலேயே நாறுகிறதா?"
நரிக்கு தர்மசங்கடமாய் போய்விட்டது. உண்மையைச் சொன்னாலும் ஆபத்து. பொய் சொன்னாலும் பேராபத்து. என்ன செய்யலாம்? என்று ஒரு நிமிடம் யோசித்தது. கடைசியில், அது மூக்கை உறிஞ்சிக் கொண்டே, "ராஜா மன்னிக்க வேண்டும்! இரண்டு நாளாய் கடுமையான ஜலதோஷம். அதனால், எந்த வாசனையையும் என்னால் நுகர முடியாது! - என்றது சோகமாய்!
சிங்கம் நரியின் பதிலால் மகிழ்ந்தது. உடனே அதை தனது அமைச்சராக்கிக் கொண்டது.
'விவேகம் என்றும் வெல்லும்!'- என்பது இதுதான்.