சாந்திவனத்து கதைகள்: 'முடியாதது ஒன்றுமில்லை!'சாந்திவனத்தை ஒட்டி ஒரு பெரிய குளம் இருந்தது.

அதில் பொன்னம்மா, பொன்னைய்யா என்ற வாத்துக்கள் வசித்து வந்தன.

அந்த வாத்துக்களுக்கு, அழகன், வெள்ளையன், கழுத்தன், குட்டையன் என்று நான்கு பிள்ளைகள். 

முதல் மூன்று வாத்துக்குஞ்சுகளும் ஆரோக்கியமாய் இருந்தன. பலம் வாய்ந்தவையாக அவை விளங்கின. 

குட்டையனோ நோஞ்சானாக இருந்தது.

ஒருநாள்.

பொன்னைம்மாவும், பொன்னைய்யாவும் தங்கள் பிள்ளைகளை அழைத்தன. கூட அழைத்துக் கொண்டு குளத்தில் மீன் வேட்டையாடச் சென்றன.

முதல் மூன்று குஞ்சுகளும் நன்றாக நீந்தின. தலையை நீரில் முக்குவது. வேகமாக நீந்துவது. இறக்கைகளை அசைப்பது என்று பலவாறு நீரில் சாகசங்கள் புரிந்தன. ஏராளமாய் மீன்களைப் பிடித்தன. 


குட்டையனோ ஏதும் செய்யத் தெரியாமல் ஒரு மணல் திட்டில் நின்று வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. 

"நான் நோஞ்சான். மக்கு. எனக்கு ஒன்றும் தெரியவில்லை!" - என்று அழ ஆரம்பித்தது.

இதை பொன்னம்மாவும், பொன்னைய்யாவும் கண்டன. ஓடிவந்து குட்டையனை அணைத்துக் கொண்டன. 

"நீ மக்கு இல்லை. நோஞ்சானும் இல்லை. இன்னும் உனக்குப் போதிய பலம் வரவில்லை என்பதே உண்மை. அழாதே கண்ணா! நீ முயற்சி செய்தால் பலசாலியாக மாறலாம். நாங்களும் உனக்கு வேட்டையாடவும், நீந்தவும் பயிற்சி அளிப்போம். அழாதே செல்லம்!" - என்று தேற்றின.

அன்றுமுதல் தினமும் குட்டையன், பெற்றோருடன் குளத்துக்குச் சென்று பயிற்சி பெறலாயிற்று. நீந்துவது அவ்வளவு சுலபமாக இல்லை. கால்கள் வலித்தன. உடல் சோர்ந்துவிட்டது. மூச்சு முட்டியது. இருந்தும் விடாமல் அது தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டது. கூடவே நத்தை, மீன்கள், புழுக்கள் என்று வேட்டையாடி தின்றது.

சில நாட்கள் சென்றன. இப்போது குட்டையன் நன்றாக வளர்ந்துவிட்டது. உடலும்  கொழுத்து பளபளவென்று மின்னியது. இறக்கைகள் பழுப்பும், வெள்ளையுமாய் முளைத்து அழகு சேர்த்தன.

அன்று குட்டையனின் பிறந்த நாள். மீன்களை வேட்டையாடிக் கொண்டு வர குடும்பமே புறப்பட்டது. 

பொன்னம்மா குளத்திலிருந்து செந்தாமரை மலரைப் பறித்தது. பிள்ளையின் கழுத்தில் அணிவித்தது. குட்டையின் பார்ப்பதற்கு அழகாய் இருந்தது.


வாத்துக்குஞ்சுகள் ஆழமாய் நீந்தி சென்றன. பெரிய பெரிய மீன்களைப் பிடித்தன. தம்பியின் பிறந்த நாள் பரிசாக மற்றவர்க்குக் கொடுத்து மகிழ்ச்சியைப் பகிரிந்து கொண்டன. 

குட்டையனோ அதிக ஆழமான பகுதிகளுக்கு பயமில்லாமல் சென்றது. பெரிய மீன்களைப் பிடித்துக் கொண்டு வந்தது. தன் சகோதரர்களுக்குக் கொடுத்து மகிழ்ந்தது. இன்னும் சந்தோஷம் தாள முடியாமல் நீரில் குட்டிக் கர்ணம் போட்டது. தாவித் தாவி குதித்தது.

"ஏய்.. குட்டையா! நீயா இப்படி நீந்துவது? நம்ப முடியவில்லையே! எப்போது இந்த வித்தைகளைக் கற்றாய்?" - என்று மற்ற வாத்துக் குஞ்சுகள் வியப்புடன் கேட்டன. 

"நீங்கள் எல்லோரும் தூங்கும்போதும், ஓய்வெடுக்கும் போதும் நான் விடா முயற்சியுடன் இதையெல்லாம் கற்றுக் கொண்டேனாக்கும்! அம்மாவும், அப்பாவும் எனக்கு உதவி செய்தார்கள் தெரியுமா?" - என்று குட்டையன் வெட்கத்துடன் சொன்னது.

வாத்துக் குஞ்சுகள், "பலே.. பலே!" - என்று தங்கள் சகோதரனை அணைத்துக் கொண்டன. 

"முயன்றால் முடியாதது ஒன்றுமில்லை!" - என்று குட்டையன் நிரூபித்துக் காட்டிவிட்டது.

Related

சாந்திவனத்து கதைகள் 5846024328516518674

Post a Comment

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress