குழந்தை இலக்கியம்: 'ஐந்தாண்டு மகாராஜா!'


அந்த சட்டத்தைக் கேட்டாலே விநோதமாக இருக்கும்.

ஆமாம். விநோதமன்றி வேறென்ன? நீங்களே கேளுங்களேன்!

அந்த ஊருக்கு யார் வேண்டுமென்றாலும் ராஜாவாக வரமுடியும். ஆனால், அந்த பதவி ஐந்தாண்டுகள் மட்டும்தான்!

ஐந்தாண்டுகள் முடிந்ததும், மறுநாள் பொழுது புலர்ந்ததோ இல்லையோ ராஜாவை ஆற்றின் மறுகரையை ஒட்டி உள்ள காட்டில் விட்டுவிடுவார்கள்.

இதென்னடா கொடுமை என்கிறீர்களா? இன்னும் கேளுங்களேன்!

அந்தக் காட்டில் மனிதர்கள் கிடையாது. வெறும் கொடிய விலங்குகள் மட்டும்தான் இருந்தன! அதுவும் 'காங் காங்' பசியோடு! யார் காட்டுக்குள் நுழைந்தாலும் போதும்; 'லபக்'கென்று பாய்ந்து கொன்று தின்றுவிடும்.

அந்த ஊரின் சட்டத்தை யாராலும் மாற்ற முடியாது.

நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொண்டவர் மட்டுமே அரியணையில் ராஜாவாக அமர முடியும். ஆக மொத்தத்தில் ராஜாவாக முடிசூட்டிக் கொண்டவரின் கதி ஐந்தாண்டுகளுக்குப் பிறகு அதோ கதிதான்! நிச்சயம் மரணம்தான்!

கடுமையான சட்டத்துக்கு பயந்து யாரும் ராஜா பதவிக்கு ஆசைப்படவில்லை. அதனால், ராஜாவின் அரியணை பெரும்பாலும் காலியாகவே இருந்தது.

ஆனாலும், பதவி ஆசைப் பிடித்த சிலர் எப்படியும் ஒருநாள் இறக்கதான் போகிறோம். ஐந்தாண்டு ராஜாவாக இருந்து ஆண்டு, அனுபவித்துதான் செத்துப் போகலாமே என்று பதவியை ஏற்றுக் கொள்வதும் உண்டு. அப்படி ராஜாவான பலர் பயத்தில் மாரடைப்பு ஏற்பட்டு செத்துப் போனதும் உண்டு. மிச்சம் மீதியானவர்கள் ஐந்தாண்டு முடிந்ததும். மாலை மரியாதையோடு மறுகரையில் உள்ள விலங்குகளுக்கு இரையானதும் உண்டு.

இப்படிப்பட்ட ஒரு சூழலில், தற்போது, ராஜாவாக இருந்தவரின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிந்தது.  

மறுநாள், ஆற்றின் கரையைக் கடந்து காட்டிற்குச் செல்ல வேண்டும். அதுதானே நிபந்தனை மற்றும் வழக்கம்.

ராஜாவை வழியனுப்ப ஊரே திரண்டிருந்தது. 

அரண்மனையிலிருந்து ராஜா வெளியே வந்தார். துக்கமாக அழுத கண்களோடு ராஜா வருவார் என்று நினைத்திருந்த மக்களுக்கு ஒரே வியப்பு. 

ராஜா எப்படி வந்தார் தெரியுமா? 

மிகச் சிறந்த ஆடை, ஆபரணங்களை அணிந்தவராக, முடிசூடி, தங்க வாளேந்தி, கிரீடத்தில் வைரங்கள் மின்ன ஏதோ மாப்பிள்ளைப் போல கம்பீரமாக மக்கள் முன் வந்து நின்றார்.

அதைக் கண்டு மக்கள் வாயைப் பிளந்து நின்றனர். சிலர் வாய் விட்டும், இப்படி சொல்லிக் கொண்டனர்: ''இன்னும் அரை மணிநேரத்தில் சாகப் போகிறவருக்கு இவ்வளவு அலங்காரமா!'' 

ஆற்றங்கரையில் நிறுத்தப்பட்டிருந்த படகைப் பார்த்ததும் ராஜா கோபத்துடன் கத்தினார்: ''ஒரு ராஜாதி ராஜா பயணம் செய்யும் படகா இது? யாரங்கே? சர்வ அலங்காரம் செய்து வைத்திருக்கும் அந்த பெரிய படகைக் கொண்டு வாருங்கள்!

அதேபோல, உங்கள் பெரு மதிப்பிற்குரிய ராஜாவாகிய நான் நின்று கொண்டா பயணிப்பது? யாரங்கே..! அரபு நாட்டிலிருந்து வந்த பிரதிநிதிகள் பரிசாக அளித்த அந்த நவரத்தின சிம்மாசனத்தைக் கொண்டு வாருங்கள்!'' 

கட்டளைகள் பறந்தன. சிப்பாய்கள் ஓடோடி சென்று ராஜாவின் கட்டளைகளை நிறைவேற்றினார்கள்.

சற்று நேரத்தில் பூரணமாய் அலங்கரிக்கப்பட்ட அழகான படகு ஆற்று நீரைத் கிழித்துக் கொண்டு மறுகரை நோக்கிப் பயணித்தது. அதில் அமைக்கப்பட்டிருந்த சிம்மாசனத்தில் மகாராஜா கம்பீரமாய் அமர்ந்திருந்தார். 

மக்கள் திகைத்து நிற்க, ராஜா கையசைத்து விடைப்பெற பயணம் தொடர்ந்தது. 

இந்த சம்பவத்தால், மிகவும் அதிர்ச்சியடைந்தவன் படகோட்டியே!  

காரணம், இதுவரை அவன் மறுகரைக்கு அழைத்துச் சென்ற எந்த ராஜாவும் இப்படி மகிழ்ச்சியாக இருந்து கண்டதில்லை. படகில் வலுக்கட்டாயமாக ஏற்றிவிடுவார்கள் அல்லது குண்டு கட்டாக கொண்டு வந்து படகில் விடுவார்கள். அப்படி ஏறிய ராஜாக்களும் அழுது புலம்பிக் கொண்டு வருவார்கள். 

ஆனால், இப்போதோ இந்த ராஜா ஏதோ உல்லாசப் பயணம் போவதுபோல, சந்தோஷமாக வருகிறாரே! என்னதான் நடக்கிறது இங்கே?

படகோட்டி பொறுத்துக்கொள்ள முடியாமல் வாய்விட்டே கேட்டும் விட்டான்: "மகாராஜா! தாங்கள் இப்போது எங்கே சென்று கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியுமா?''

"ஓ..! நன்றாக தெரியும்! ஆற்றின் மறுகரைக்குதான் சென்று கொண்டிருக்கின்றேன்!"

''மகாராஜா! அங்கே சென்றவர்கள் திரும்ப இந்த நகரத்திற்கு வந்ததில்லை என்பதும் தெரியுமா?''

" நன்றாகவே தெரியும். நானும் இந்த நகரத்திற்கு திரும்ப வரப் போவதில்லை! என்பதும் நன்றாகவே தெரியும்!"

"அப்படியிருக்கும்போது, உங்களால் எப்படி இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்க முடிகிறது மகாராஜா?''

"ஓ..! அதுவா! நான் கொடிய விலங்குகளுக்கு இரையாகிவிடுவேன் என்றா நினைக்கிறாய் முட்டாள்? படகை ஒழுங்காக ஓட்டு!" - என்று படகோட்டியை ராஜா அதட்டினார்.


ராஜா தொடர்ந்து சொன்னார்:

"நான் ராஜாவாக பதவி ஏற்ற முதல் நாளிலேயே என்ன செய்தேன் தெரியுமா? திறன் வாய்ந்த வனவிலங்கு ஆய்வாளர் குழு ஒன்றை காட்டிற்கு  அனுப்பினேன். வனவிலங்குகளை கணக்கெடுக்க ஆணையிட்டேன். அந்த கணக்கெடுப்பு முடிய கிட்டதட்ட ஓராண்டு ஆனது. அதன்பின் அடர்ந்த காட்டுக்குள் விலங்குகளை விரட்டி அவற்றுக்கான சரணாலயங்களும் அமைத்தேன். விலங்குகளுக்கு இயற்கையாய் தேவையான வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டுவிட்டன. அவை தம் இருப்பிடங்களைவிட்டு வெளியே வராதவாறு அகழிகளை வெட்டியதோடு அவற்றை கண்காணிக்கவும் காவலர்களை நியமித்துவிட்டேன்.

இந்தப் பணி முடிந்த கையோடு நமது நாட்டின் மிகச் சிறந்த வேளாண் விஞ்ஞானிகளை காட்டுக்குள் அனுப்பி அந்த மண்ணுக்கு ஏற்ற விளைச்சல் தரும் சாகுபடி என்ன என்று அறிக்கை கேட்டேன். அந்த அறிக்கையின் பரிந்துரைக்கு ஏற்ப நமது உழவர்கள் குழு, நிலத்தை சீர்ப்படுத்தி செழிப்பான வேளாண் நிலங்களாக்கி தானியங்களை பயிரிட்டார்கள். இந்தப் பணிகள் எல்லாம் இரண்டாம் ஆண்டு முடிவுக்குள் நடந்து முடிந்தன.


அதன் பின் நமது தொழில்நுட்பம் வாய்ந்த கட்டிடக்கலை வல்லுநர்களின் பரிந்துரையின் பேரில் அழகிய கட்டிடங்கள் கட்டப்பட்டன. அரண்மனை மாட மாளிகைகள் என்று அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு அழகிய சாலைகள் அமைக்கப்பட்ட குடியிருப்பு தயாரானது.

அதற்கடுத்த ஆண்டுகளில் அரசு அதிகாரிகளை அனுப்பி நிர்வாகம் சீரமைப்பு செய்யப்பட்டது. அங்கு இதுவரை குடியிருக்கும் மக்களுக்கான கல்வி, மருத்துவம், வீடுதோறும் நவீன கழிப்பிடங்கள் என்று அனைத்தும் செய்து தரப்பட்டன. 

கொடிய விலங்குகளைக் கொல்லாமல் அவற்றுக்கான சரணாலயங்களை அமைத்து அவற்றின் வசிப்பிடங்களை சாந்திவனமாக்கிவிட்டோம். தற்போது நான் செல்வது சாந்திவனத்தையொட்டியுள்ள 'அமைதிபுரம்' என்னும் பெருநகரத்துக்கு! நான் சாகப் போகவில்லையப்பா! மக்களை ஆளப்போகிறேன்! அதனால், இந்த படகோட்டி வேலையை மேம்படுத்தி நீர்வழி வாகனப் போக்குவரத்துத்துறைக்கு உன்னை தலைவராக்க இருக்கிறேன்! என்ன சம்மதம்தானே?"

அறிவாளியான மக்கள் நலன்நாடும் ராஜாவின் பிரஜை என்று சொல்லிக் கொள்ள வரும் தேனான வாய்ப்பை அந்த படகோட்டி நழுவவிடுவாரா என்ன? பலமாக தலையாட்டி சம்மதம் தெரிவித்த படகோட்டி ராஜாவை இறக்கிவிட்ட கையோடு மனைவி, மக்களை அழைத்து வந்து அமைதிபுரத்தில் குடியேறிவிட்டார்.

  • வாழ்க்கைக்கான உந்துதலும், 
  • அதற்காக நிர்ணயிக்கப்பட்ட இலக்கும், 
  • அந்த இலக்கை அடைவதற்காக திட்டமிட்ட உழைப்பும்தான் வெற்றியின் சிகரங்களை அடைய வைக்கும்.

(இது சமரசம் 1-15, ஜனவரி, 2014 இதழில் வெளிவந்தது)


Related

குழந்தை இலக்கியம் 3404863828955694331

Post a Comment

emo-but-icon

Hot in week

Recent

Comments

Contact Us

Name

Email *

Message *

item
Wordpress