சாந்திவனத்து கதைகள்: 'நேரத்தோடு போகணும்'
http://mazalaipiriyan.blogspot.com/2014/01/blog-post_23.html
அன்று சாந்திவனத்து 'அறிவொளிப் பள்ளியின்' ஆண்டு விழா. அதன் சிறப்பு விருந்தினர் வரிக்குதிரை.
நிகழ்ச்சி தொடங்கியது. ஆடல், பாடல் என்று கிராமிய நிகழ்ச்சிகளால் மேடை களைக்கட்டியது. மின்மினி பூச்சிகளின் அலங்கார விளக்குகள் கண்ணைப் பறித்தன.
அறிவிப்பாளாராக இருந்த யானை சிறந்த மாணவர்களின் பெயர்களை வாசித்தது. "பிள்ளைகளே! ஆண்டு முழுவதும் ஒருநாள் கூட தாமதமில்லாமல் யார் பள்ளிக்கு வருகிறார்களோ அவர்களுக்கான பரிசு இது! இந்தப் பரிசை இவ்வாண்டு மான் குட்டி பெறுகிறது!" - என்று அறிவித்ததும் கரகோஷம் விண்ணைப் பிளந்தது.
மான் குட்டிக்குச் சந்தோஷம் தாள முடியவில்லை. அதற்கு பழைய சம்பவங்கள் வரிசையாய் நினைவில் வந்தன. அப்போதெல்லாம் மான் குட்டி பள்ளிக்கு எப்போதும் தாமதமாகவே வரும். அதன் காரணமாக தினமும் அது நரி ஆசிரியரிடம் செமத்தியாக அடி வாங்கும். என்னதான் அடித்தாலும், அது திருந்துவதாக இல்லை. கடைசியில், 'லேட் மான் குட்டி' என்னும் பட்டப் பெயரை பெற்றதுதான் மிச்சம்.
சிறிது காலத்துக்குப் பின் புதிய ஆசிரியராக யானை வந்தது. அது மாணவர்களை புரிந்து கொண்டு நடந்தது. மாணவர்களின் தவறுகளை திருத்துவத்தில் கவனமாக இருந்தது.
ஒருநாள்.
வழக்கம் போல் மான் குட்டி பள்ளிக்குத் தாமதமாக சென்றது. அங்கு எல்லா மாணவர்களும் படிப்பதற்கு பதிலாக மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தார்கள்.
மான் குட்டியைக் கண்டதும் கரடிக் குட்டி, "ஓய்..! லேட் மானாரே! நீ இப்போதுதான் வருகிறாயா? சனிக்கிழமை என்பதை மறந்து விட்டாயா? இன்று நாள் முழுவதும் விளையாட்டாச்சே!" - என்று சொல்லிச் சிரித்தது.
"இன்று நாங்கள் வீட்டிலிருந்து உணவைக் கொண்டு வந்தோம். கரடியான் நிறைய தேன் கொண்டு வந்தான். குரங்குப் பயலோ நாவல் பழங்களைப் பறித்து வந்தான். ஒட்டகத் தம்பி சோளப் பொறிகளை எடுத்து வந்தான்!" - என்றது மயல் குட்டி கண்ணடித்துக் கொண்டே.
"இன்றைக்கு நம் ஆசிரியர் தம் தோட்டத்திலிருந்து இனிப்பான கரும்புகளையும் அல்லவா கொண்டு வந்திருந்தார்!" - என்றது குதிரைக் குட்டி.
"எனக்கு முன்னமே இதை ஏன் சொல்லவில்லை? அருமையான விருந்தை நான் இழந்து விட்டேனே!" - என்று மான் குட்டி பரிதாபமாய் சொன்னது.
"நீயோ என்றைக்கும் லேட். நேற்றுக் காலையில் நம் ஆசிரியர் இந்த அறிவிப்பைச் செய்த போது, வழக்கம் போல நீ வகுப்பில் இல்லை. அதற்கு நாங்கள் என்ன செய்வது?" - என்றது முயல் குட்டி.
இனி தாமதமாக வருவதில்லை என மான் குட்டி தீர்மானித்து கொண்டது. ஆனால், அடுத்த நாள் வழக்கம் போல அது தாமதமாகவே பள்ளிக்கு வந்தது. அதன் பழக்கம் மாறவில்லை.
அடுத்த சனிக்கிழமை. மான் குட்டி பள்ளியை அடைந்த போது, அங்கு யாரையும் காணவில்லை. "எல்லோரும் எங்கு போய்விட்டார்கள்?" - வாட்ச்மேன் ஒட்டகச் சிவிங்கியிடம் மான் குட்டி கேட்டது. "இன்று எல்லோரும் நதிக்கரையோரம் பிக்னிக் போய் இருக்கிறார்கள்!" - என்றது ஒட்டகச் சிவிங்கி.
"நதிக்ரையோரமா?" என்ற மான் குட்டி அதிர்ச்சி அடைந்தது. "ஆஹா! விளையாட நல்ல இடமாச்சே!" - என்று மகிழ்ச்சியுடன் அது கத்தியது. தனியாகவே நதிப்பக்கம் செல்லலாயிற்று;. அப்படி போகும்போது, பாறையில் வழுக்கி ஒரு முட் புதரில் விழுந்து விட்டது. உடல் முழுவதும் முட்கள் குத்திக் கொண்டன. உதவி செய்ய அக்கம், பக்கத்தில் யாருமில்லை. புதரிலிருந்து விடுபடவும் முடியவில்லை. கொஞ்ச நேரம் புதரில் அப்படியே கிடந்தது. அதன்பின் தொலைவில் பிக்னிக் போன மாணவர்கள் திரும்பி வரும் சத்தம் கேட்டது. அருகில் வந்ததும், மான்குட்டி சிக்கித் தவிப்பதைக் கண்டு அவை கேலி செய்தன.
அதற்குள் அங்கு யானை வந்தது. நடந்ததை தெரிந்து கொண்டது. "நின்று கேலி செய்தது போதும்! முதலில் உங்கள் தோழனை ஆபத்திலிருந்த காப்பாற்றுங்கள்!" - என்று கத்தியது.
எல்லா மிருகங்களும் மிகவும் சிரமப்பட்டு மான் குட்டியை முட்களிலிருந்து மீட்டன. நடந்த சம்பவமும் யானையின் கனிவான அறிவுரைகளும் மான் குட்டியை மிகவும் பாதித்தது.
அடுத்த நாள். பள்ளி மணி அடிப்பதற்காக வந்த சிம்பன்ஸி குரங்கு, மான் குட்டியைக் கண்டது. ஆச்சரியப்பட்டுப் போனது. மணி அடிப்பதற்கு முன்னமே மான்குட்டி பள்ளிக்கு வந்து வகுப்பறையில் அமர்ந்து இருந்தது. அன்றிலிருந்து அது பள்ளிக்கு என்றும் தாமதமாக வருவதில்லை.
"நேரம் தவறி பள்ளிக்குச் செல்வது தீயப் பழக்கம்!" - என்று மான் குட்டி தெரிந்து கொண்டது.
"இப்போது மான் குட்டி பரிசைப் பெற்றுக் கொள்ள மேடைக்கு அழைக்கிறோம்" - யானை அழைக்க மிருகங்களின் கரவோலி காடெங்கும் ஒலித்தது.
மான் குட்டி பழைய நினைவுகளிலிருந்து விடுபட்டு மேடைக்குச் சென்றது. பரிசைப் பெற்றுக் கொண்டது. "நன்றி.. அய்யா..!" - என்று வரிக்குதிரையிடம் பணிவுடன் சொன்னது.