சாந்திவனத்துக் கதைகள்: 'அளந்து பேசு!'
http://mazalaipiriyan.blogspot.com/2014/03/blog-post_4.html
சாந்திவனத்தில் சிம்பன்ஸி குரங்கு நகைக்கடை வைத்திருந்தது.
கேட்பவர்களுக்கு ஏற்றாற் போல அழகான வடிவமைப்பில் நகைகளை செய்து தருவதில் அது பேர் பெற்றது.
ஒருநாள். நகைக்கடைக்கு வயதான மயில் ஒன்று வந்தது. அதன் அலகில் ஒரு சின்ன மூட்டை இருந்தது.
“சிம்பன்ஸியாரே! இதோ இந்த மூட்டையில் தங்க தாது உள்ளது. கொஞ்சம் எடைப்போட்டு சொல்ல முடியுமா?” – என்று கேட்டது.
“கடையில், முறம் இல்லை மயிலாரே! அத்தோடு துடைப்பமும் இல்லை! அதனால் என்னால் உமக்கு உதவ முடியாது!” – என்றது வருத்தத்துடன் சிம்பன்ஸி.
“ம்.. நாம் எடைப்போடச் சொன்னால்.. முறம் இல்லை; துடைப்பம் இல்லை என்கிறதே இது! நாம் ஒன்று கேட்டால் இந்த முட்டாள் சிம்பன்ஸி வேறு ஏதோ உளறுகிறதே!” – என்று தனக்குள் முணுமுணுத்துக் கொண்டது மயில்.
“சிம்பன்ஸியாரே! நான் உம்மிடம் முறத்தையும், துடைப்பத்தையும் பற்றி கேட்கவில்லை. என் தங்கத் துகள்களை எடைப் போட்டுத் தர சொன்னேன். காது கேட்கிறதா? சரியான செவிடு போலிருக்கிறாயே!” – என்று கோபமாக கத்தியது.
“அதுதான் நான் ஆரம்பத்திலேயே சொன்னேனே! என்னிடம் முறம் இல்லை; துடைப்பமும் இல்லை என்று! உமக்குப் புரியவில்லையா?" - என்று பதிலுக்கு சிம்பன்ஸியும் சற்று சத்தமாக சொன்ன கையோடு,
“அய்யா! நீங்கள் மிகவும் வயதானவராக உள்ளீர்கள். கண் பார்வையும் குறைந்துள்ளதை நீங்கள் போட்டுள்ள கண்ணாடியே காட்டுகிறது. அத்துடன் உடல் வேறு உங்கள் முதுமையால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. இதனால், தங்கத் துகள்களை எடைப்போடும் போது தரையில் சிந்தும் துகள்களை உங்களால் காண முடியாது! அதேபோல அவற்றைப் பெருக்கி எடுக்க வசதியாக உண்மையிலேயே என்னிடம் துடைப்பமோ, முறமோ இல்லை! இதைதான் நான் ஆரம்பத்திலேயே சுருக்கமாக சொன்னேன்!” - என்றது மென்மையாக.
மயில் சிம்பன்ஸியின் நல்ல குணத்தைப் புரிந்து கொண்டது. தான் அவசரப்பட்டு கோபப்பட்டதற்கு வருந்தியது. தலை குனிந்தவாறே அங்கிருந்து பறந்து சென்றது.
வார்த்தைகளைக் அவரசப்பட்டுக் கொட்டி விடக்கூடாது. அளந்து பேச வேண்டும் என்பது இதுதான்.
அறிவாளிகள் எப்போதும் சிந்தித்துவிட்டே பேச ஆரம்பிப்பார்கள்.
முட்டாள்கள் பேசிவிட்டு அதன்பிறகு சிந்திப்பார்கள்; இதனால் ஏற்பட்ட கெட்ட விளைவுகளுக்குக் காரணமான தம் செயல்களுக்கு வருத்தப்படுவார்கள்.