முஹம்மது நபிகளார் (ஸல்) யார்?
http://mazalaipiriyan.blogspot.com/2012/11/blog-post_16.html
முஹம்மது நபி அல்லாஹ்வின் திருத்தூதர். இறுதி நபியாவார்கள்.
நபிகளார் அரபு நாட்டின் மக்கா மாநகரத்தில் கி.பி. 570 ஆம் ஆண்டு பிறந்தார்கள்.
மக்காவில்தான் புனித கஅபா இறையில்லம் உள்ளது. அது முதன் முதலில் ஆதி பிதாவும் இறைத்தூதருமான ஆதம் நபியவர்களால் கட்டப்பட்டது. ஓர் இறைவனான அல்லாஹ்வை வணங்க கட்டப்பட்ட இறையில்லம் அது.
நாளடைவில் கஅபா சிலைகளால் நிரப்பப்பட்டுவிட்டது.
நபிகளார் தமது 6 வயதில் அனாதையானார்கள். தமது 20 வயதில் தம்மைவிட வயதில் மூத்த ஒரு விதவையை மணந்தார்கள். அந்த அம்மையாரின் பெயர் கதீஜா.
கதீஜா அம்மையார் வணிகராக இருந்தார்கள். ஒட்டங்கள் மீது சரக்குகள் ஏற்றிக் கொண்டு - இன்றைய கண்டெய்னர் சரக்கு பெட்டகங்கள் போல - வெளி நாடுகளுக்கு அனுப்புவார்கள்.
இந்த சரக்குகள் கொண்டு செல்லும் பணியில்தான் நபிகளார் இருந்தார்கள்.
நபிகளாரின் நேர்மையும், ஒழுக்கத்தையும் கண்ட கதீஜா அம்மையார் திருமணம் புரிந்து கொண்டார்கள்.
நபிகளார் தமது 30 வது வயதில் தனித்து இருக்க ஆரம்பித்தார்கள்.
மக்காவுக்கு வெளியே ஒரு மலை. அதன் பெயர் ஹிரா. அதில் ஒரு குகை. அதன் பெயர் நூர்.
நபிகளார் இந்த குகைக்குள் பல நாட்கள் தனித்திருந்து இறைவனை நினைத்திருப்பார்கள்.
மக்காவாசிகள் குடிப்பது, சூதாடுவது, பெண் குழந்தைகளை உயிருடன் கொல்வது, பெண்களை இழிவாக நடத்துவது, ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வது என்று இருந்த நாள் அது.
நபிகளார் குகைக்குள் மக்காவாசிகளைப் பற்றியே நினைத்து வேதனைப்படுவார்கள். அவர்களுக்கு நேர்வழி காட்டும்படி இறைவனை வேண்டுவார்கள்.
இப்படிப்பட்ட ஒருநாளில்.. ரமளான் மாதத்தில்.. பளீரென்று அடிவானத்தில் ஒரு வெளிச்சம் தெரிவதைக் கண்டார்கள். ஓதுவீராக என்று சத்தத்தையும் கேட்டார்கள்.
நபிகளார் படித்தவரில்லை. அவருக்கு ஓதத் தெரியாது.
அதனால்.. அவர்கள் ஓதத் தெரியாமல் நிற்க .. மூன்று முறை ஓதுவீராக என்ற சத்தம் தொடர்ந்தது.
'வஹீ' எனப்படும் திருக்குர்ஆனின் செய்தி இப்படிதான் அருளப்பட்டது.
அதை இறைவனிடமிருந்து கொண்ட வந்தது 'ஜீப்ரியல்' எனப்படும் தலைமை வானவர் ஆவார். இப்படிதான் நபிகளார் இறைவனின் தூதராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள்.
நபிகளார் குகைக்குள் நடந்ததை தனது மனைவியிடமும், நண்பர்களிடமும் சொல்கிறார்கள்.
மக்களை ஓர் இறைவனான அல்லாஹ்வை வணங்கும்படி போதிக்கிறார்கள்.
'சிலைகள் சக்தியற்றவை. பேச முடியாதவை. கேட்க முடியாதவை. பார்க்க முடியாதவை.' என்று அறிவுறுத்துகிறார்கள். மக்களை நல்லவர்களாக வாழும்படி அறிவுறுத்துகிறார்கள். பெண்களுக்கு மதிப்பளிக்க வேண்டும். பெண் குழந்தைகளை கொல்லக் கூடாது. என்று நல்லவற்றை எடுத்துரைக்கிறார்கள்.
இந்த அறிவுரைகள் மக்காவாசிகளுக்குப் பிடிக்கவில்லை. அவரை கொலைச் செய்ய முடிவெடுக்கிறார்கள்.
கி.பி. 622-இல், நபிகளாரும் அவரைப் பின்பற்றிய முஸ்லிம்களும் மக்காவிலிருந்த மதீனாவுக்கு சென்று விடுகிறார்கள். இந்த 'நாடு துறத்தல்' வரலாற்றில் 'ஹிஜ்ரத்' எனப்படுகிறது.
இஸ்லாமிய ஆண்டு கணக்கும் இங்கிருந்துதான் ஆரம்பமாகிறது.
மக்கா வாழ்க்கை 13 ஆண்டுகள், மதீனா வாழ்க்கை 10 ஆண்டுகள் என்று நபிகளார் 23 ஆண்டுகள் இறைவனிடமிருந்து கட்டளைகளைப் பெற்றார்கள்.
இதுதான் திருக்குர்ஆன் என்றழைக்கப்படுகிறது.
சில போர்களுக்குப் பிறகு கி.பி. 630 இல், நபிகளார் முஸ்லிம்களுடன் திரண்டு வந்து மக்காவுக்கு திரும்பினார்கள்.
ஒரு துளி ரத்தமும் சிந்தாமல் வெற்றிப் பெற்ற யுத்தம் அது. கஅபாவில் வைக்கப்பட்டிருந்த சிலைகள் அகற்றப்பட்டன.
கஆபா அல்லாஹ்வை வணங்கும் இறையில்லமானது.
ஜீன் 8, 632 இல், நபிகளார் மரணமடைகிறார்கள்.
நபிகளாரின் நெருங்கிய நண்பர் அந்த மரணச் செய்தியை இப்படி முஸ்லிம்களுக்கு அறிவிக்கிறார்கள்:
"யார் எல்லாம் முஹம்மதுவை வணங்கினீர்களோ அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.. முஹம்மது இறந்து விட்டார்.
யார் எல்லாம் இறைவனை வணங்கினீர்களோ அவர்கள் தெரிந்து கொள்ளட்டும்.. அல்லாஹ் மரணமில்லாத நித்திய ஜீவன்!"
- இறைவன் நாடினால்.. கற்பது தொடரும்.